• July 17, 2025
  • NewsEditor
  • 0

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10 வயது சிறுமி ஒருவர் படித்து வருகிறார். இவரின் பாட்டி வீடு அந்தப்பகுதியில் உள்ளது.

கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்ததும் சிறுமி, தன்னுடைய பாட்டி வீட்டுக்கு தனியாக நடந்துச் சென்றார். பாட்டி வீட்டுக்குச் செல்லும் பாதை ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியாகும். அதனால் சிறுமி, புத்தக பையை சுமந்தப்படி பாட்டி வீட்டுக்கு நடந்துச் சென்றிருக்கிறார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், சிறுமியை வழிமறித்திருக்கிறார். பின்னர் சிறுமியை தூக்கிய அந்த இளைஞர், அருகில் உள்ள மாந்தோப்புக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அந்த இளைஞரின் பிடியிலிருந்து தப்பிக்க முடிந்தளவுக்கு சிறுமி போராடியிருக்கிறார். ஆனால் ஈவு இரக்கமற்ற அந்த இளைஞர், சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத மாந்தோப்பில் வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கியிருக்கிறார். அந்த இளைஞரிடமிருந்து தப்பிக்க சிறுமியும் போராடி தோற்றுப்போயிருக்கிறார்.

சிசிடிவி

இந்தச் சமயத்தில் அவ்வழியாக பைக்கில் ஒருவர் சென்றிருக்கிறார். பைக் சத்தம் கேட்ட இளைஞர், சிறுமியை மாந்தோப்பில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இளைஞரின் கொடூர செயலால் பாதிக்கப்பட்ட சிறுமி, அழுதப்படியே பாட்டியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

சிறுமியின் கோலத்தைப் பார்த்த அவரின் உறவினர்கள் என்ன நடந்தது என்று அவரிடம் கேட்க தனக்கு நடந்த கொடுமையை மழலை மொழியில் சிறுமி கூறியிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர் ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்ற போலீஸார் விசாரணையை தொடங்கினர். பின்னர் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி நடந்துச் செல்லும் காட்சியும் அவரைப் பின்தொடர்ந்து செல்லும் இளைஞரின் உருவமும் அந்தப்பகுதியில் உள்ள ஒரு சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

அந்த சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியில் வராமல் தடுக்க அதற்கான முன்ஏற்பாடுகளை ஆரம்பாக்கம் போலீஸார் செய்தனர். இருந்தபோதிலும் அந்த சிசிடிவி காட்சியை செல்போனில் பதிவு செய்த ஒருவர் அதை சமூகவலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது திருவள்ளூர் மாவட்ட போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறுமிகள் பாலியல் தொல்லை | சென்னை | வண்டலூர்
சிறுமிகள் பாலியல் தொல்லை | சென்னை | வண்டலூர்

இதையடுத்து வீடியோ எப்படி வெளியானது என சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் ஆரம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை முடிந்து அவர் நலமாக உள்ளார். சிறுமிக்கு போலீஸார் கவுன்சலிங் அளித்திருக்கிறார்கள்.

சம்பவம் நடந்து சில தினங்களாகியும் இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட இளைஞர் யார் என்ற விவரம் திருவள்ளூர் மாவட்ட போலீஸாருக்கு தெரியவில்லை. அதனால் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி சீனிவாச பெருமாள், ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வந்து வழக்கு குறித்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் குற்றவாளியைப் பிடிக்க ஆரம்பாக்கம் போலீஸாருக்கு உத்தரவிட்டார். இந்தச் சூழலில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி சீனிவாச பெருமாள் இடமாறுதலாகிவிட புதிய எஸ்.பி இந்த வழக்கை கையில் எடுத்திருக்கிறார்.

இதற்கிடையில் சிறுமிக்கு பாலியல் சித்ரவதை செய்த இளைஞரின் முகம் சிசிடிவியில் தெளிவாக தெரியவில்லை. அதே நேரத்தில் அவரின் உருவச் சாயல் வடமாநில இளைஞரைப் போல தெரிவதால் வடமாநில இளைஞர்களின் விவரங்களை போலீஸார் சேகரித்து விசாரித்து வருகிறார்கள்.

ஆரம்பாக்கம் காவல் நிலையத்துகுட்பட்ட பகுதியில் பணியாற்றும் வடமாநில இளைஞர்களிடம் சிசிடிவியில் பதிவான காட்சியைக் காண்பித்து விசாரணை நடந்து வருகிறது.

அப்போது சம்பவம் நடந்த பிறகு தங்களின் சொந்த ஊருக்குச் சென்ற இளைஞர்களிடம் விசாரிக்க தனிப்படை போலீஸார் வடமாநிலங்களுக்கு சென்றிருக்கிறார்கள். சிறுமி பாலியல் சித்ரவதை வழக்கில் குற்றவாளி யார் என்று தெரியாமல் திருவள்ளூர் மாவட்ட போலீஸார் திணறி வருகிறார்கள்.

போலீஸார்

இதுகுறித்து ஆரம்பாக்கம் பகுதி மக்கள் கூறுகையில், “வழக்கமாக சிறுமியும் அவரின் சகோதரியும்தான் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்கு வருவார்கள். சம்பவத்தன்று சிறுமிக்கு முன்கூட்டியே பள்ளி முடிந்ததால் அவர் தனியாக வந்திருக்கிறார். அப்போதுதான் இந்தக் கொடூரம் சிறுமிக்கு நடந்திருக்கிறது. போலீஸார் அலட்சியமாக செயல்பட்டதால் வீடியோ வெளியாகியிருக்கிறது. குற்றவாளி யாரென்றே தெரியாமல் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இதைப் போல இனிமேல் யாருக்கும் நடக்கக் கூடாது” என்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது “சிறுமி நடந்துச் செல்லும் சிசிடிவி வீடியோவை சமூகவலைத்தளத்தில் பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வீடியோவை வெளியிட்டது யாரென்று விசாரித்து வருகிறோம். பாலியல் சித்ரவதை வழக்கு என்பதால் கவனமாக புலனாய்வு நடத்திவருகிறோம். இன்னும் சில தினங்களில் குற்றவாளி யாரென்று தெரிந்துவிடும்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *