பிக் பாஸ் தமிழ் 7வது சீசனில் கலந்து கொண்டு டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக வந்த நடிகர் தினேஷ் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
சின்னத்திரை நடிகர் சங்கத்தில் சுமார் 2,000 பேர் உறுப்பினராக இருக்கிறார்கள். இந்தச் சங்கத்தின் தற்போதைய தலைவராக நடிகர் சிவன் சீனிவாசனும் செயலாளராக போஸ் வெங்கட்டும் இருக்கின்றனர்.
தற்போதைய நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்க இருக்கிறது.
இந்தத் தேர்தலில் சிவன் சீனிவாசன், போஸ் வெங்கட் அணி மீண்டும் போட்டியிடுகிறது, தவிர கடந்த தேர்தலில் போஸ் அணியில் போட்டியிட்டு துணைத் தலைவரான பரத் தலைமையில் ஒரு அணி போட்டியிடுகிறது.
பரத் அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் நவீந்தர் மற்றும் போஸ் வெங்கட் இருவருமே திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது இங்கு ஹைலைட்.
இன்றைய தேதியில் இந்த இரு அணிகள் தவிர மூன்றாவது ஒரு அணியும் போட்டிப் போடுகிறது அந்த அணியில் தலைவர் பதவிக்குத்தான் தினேஷ் போட்டியிடுகிறார்.
அதாவது தொடர்ந்து சின்னத்திரை தேர்தல்களில் போட்டியிடுவதை வழக்கமாக வைத்திருப்பவரும் போஸ் வெங்கட் நிர்வாகத்தால் தற்போது தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டவருமான சங்கத்தின் முன்னாள் தலைவர் ரவி வர்மாவின் ஆதரவுடன் தினேஷ் களம் இறங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள்.
தினேஷ் கடந்த தேர்தலில் ரவி வர்மா அணியில் வெற்றி பெற்று தற்போது இணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இதற்கிடையில் தினேஷையும் தேர்தலில் போட்டியிட முடியாதபடி தடுக்கும் வேலைகளையும் சிலர் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
சங்கத்தின் சந்தா செலுத்துவது தொடர்பான சில விதிமுறைகளை அவர் கடைப்பிடிக்கவில்லை எனச் சொல்லி அவருக்கெதிராக இந்த நடவடிக்கை எடுக்கலாமெனத் தெரிய வருகிறது.
தினேஷ் தரப்பும் அப்படியொரு விஷயம் நடந்தால் நீதிமன்றம் செல்ல ஆயத்தமாக இருக்கிறதாம்.
சினிமா நடிகர் சங்கம் போலவே டிவி நடிகர் சங்க தேர்தலும் இந்த முறை களேபரமில்லாமல் நடக்காது என்பது மட்டும் தெரிகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…