
‘கயல்’ தொடரைத் பார்த்து வரும் ரசிகர்கள் இப்போது கேட்கும் ஒரே கேள்வி ‘ மூர்த்தி சீரியலில் இருக்கிறாரா இல்லையா என்பதுதான்.
தொடரில் கயலின் சகோதரனாக முக்கியமான இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் அய்யப்பன். சில மாதங்களூக்கு முன் தொடரின் ஷூட்டிங் நடந்த இடத்துக்கே சென்று அய்யப்பனின் மனைவி பிந்தியா பிரச்னை செய்து அது மீடியாவில் வந்ததெல்லாம் எல்லோருக்கும் நினைவிருக்கும்.
`எந்த நேரமும் போதையிலேயே இருக்கும் அய்யப்பன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக’வும் கூறி பிந்தியா அய்யப்பன் மீது போலீஸ் புகாரும் கொடுத்தார்.
தவிர இந்த சீரியலில் அவர் கமிட் ஆன பிறகே தன் வாழ்க்கையில் பிரச்னை தொடங்கியது என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவரது கேரக்டரை தொடரில் பார்க்கவே முடியவில்லை. அவர் எங்கோ வெளியூர் போயிருப்பது போலவே காட்டி வருகிறார்கள். ‘இவருக்குப் பதில் இவர்’ என வேறு நடிகரும் கமிட் ஆனதாகத் தெரியவில்லை.
எனவே அவர் சீரியலில் இருக்கிறாரா இல்லையா எனத் தெரியாத நிலையில் `கயல்’ தொடர் சம்பந்தப்பட்ட சிலரிடம் பேசினோம்.
”சன் டிவியைப் பொறுத்தவரை சீரியல்ல நடிச்சிட்டிருந்த ஒரு நடிகர் அல்லது நடிகை தனிப்பட்ட காரணங்களுக்காக சர்ச்சைகளில் அடிபட்டாலோ அல்லது பிரச்னைகளில் சிக்கினாலோ சிக்கலைத் தீர்த்து விட்டுட்டு வாங்க’னு சொல்லிடுவாங்க. அய்யப்பன் விவகாரத்துலயும் அதுதான் நடந்தது. ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கே வந்து அவர் மனைவி பிரச்னையில் ஈடுபட்டதை சேனலும் தயாரிப்பாளர்களும் ரசிக்கலை. நல்லா போயிட்டிருக்கிற சீரியலில் ரேட்டிங்கும் பாதிக்கப்படலாம்னு நினைச்சுதான் பிரச்னையை முடிச்சுட்டு வரச் சொல்லுங்கன்னு சொல்லிட்டாங்க. அதனால அவர் இப்ப சீரியலில் இருக்காரா இல்லையானு கேட்டா வடிவேலு ஜோக் மாதிரிதான் ‘இருக்கார் ஆனா இல்ல’ங்கிற பதில்தான் வரும். ஏன்னா அவர் சீரியலில் இருந்து வெளியேற்றப்படவும் இல்லை. அதே நேரம் அவருடைய கேரக்டர் சீரியலில் வரவும் செய்யாது’ என்கின்றனர்.
அய்யப்பனின் நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசிய போது, சமாதான முயற்சிகள் தொடர்ந்து நடந்தபோதும் இருவருக்கும் இடையிலான பிரச்னையில் சுமுகமானதா தெரியல. அதனால விரைவிலேயே ஒரு முடிவு எடுப்பாங்க’ என்கின்றனர் அவர்கள்.