• July 17, 2025
  • NewsEditor
  • 0

கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் கடித்து குழந்தைகள் மரணமடையும் அதிர்ச்சி சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. கேரளாவில் இந்த ஆண்டு மட்டும் தெரு நாய்கள் கடித்து சிகிச்சைபெற்றவர்கள் இரண்டரை லட்சம்பேர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு மட்டும் குழந்தைகள் உள்பட சுமார் 21 பேர் நாய்க்கடியால் மரணமடைந்த சோகம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. இதையடுத்து நோய் பாதித்த தெரு நாய்கள் மற்றும் நோய்த் தொற்றுகளைப் பரப்பும் தெருநாய்களையும் கருணைக் கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளது கேரள அரசு. இதுகுறித்து கேரள உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் சிஞ்சு ராணி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சட்ட விரோதமாக எதையும் செய்யவில்லை. சட்டத்தின் அடிப்படையிலேயே கருணைக்கொலை செய்யும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நோய் பாதித்த தெரு நாய்களுக்கு கருணைகொலை செய்வது பற்றி அமைச்சர்கள் சிஞ்சு ராணி, எம்.பி.ராஜேஷ் ஆகியோர் அளித்த பேட்டி

நோய் பாதித்த நாய் என்பதை கால்நடை மருத்துவர் உறுதிபடுத்தி ஒப்புதல் வழங்கினால் மட்டுமே கருணைக்கொலை செய்யப்படும். அதற்கு சட்டம் உள்ளது. கருணைக்கொலை செய்வதற்கான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும். இதற்காக திருவனந்தபுரத்தில் உடனடியாக போர்ட்டபிள் ஏ.பி.சி மையம் திறக்கப்படும். கேரளா முழுவதும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒன்று என்ற அடிப்படையில் 152 போர்ட்டபிள் ஏ.பி.சி மையங்கள் திறக்கப்பட உள்ளன. 120 நாட்களில் அதற்கான இடம் தேர்வு செய்ய வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சையும் அளிக்கப்படும். நாய்களைப் பிடிப்பதற்காக பயிற்சிபெற்ற 158 பேர் உள்ளனர். மேலும் பலருக்கும் பயிற்சி அளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். ஏ.பி.சி சட்டத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என மீண்டும் மத்திய அரசை வலியுறுத்துவோம்.

வரும் ஆகஸ்ட் மாதம் தெரு நய்களுக்கு தடுப்பூசி போடப்படும். செப்டம்பர் மாதம் வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கும், லைசென்ஸ் எடுப்பதற்கும் முகாம்கள் நடத்தப்படும். இப்போது பலரும் லைசென்ஸ் எடுத்துள்ளனர். தொடர்ந்து லைசென்ஸ் எடுப்பதற்கான முகாம்கள் நடத்தப்படும்.  வளர்ப்பு நாய்களுக்கு `எலக்ட்ரானிக் சிப்’ பொருத்தப்படும்.

தெரு நாய்கள்

அதன்மூலம் வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்களின் விபரங்களும், தடுப்பூசிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் போடப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க முடியும். நோய் பாதித்த தெரு நாய்களை கருணைக் கொலை செய்வதற்காக அமைக்கப்படும் போர்ட்டபிள் ஏ.பி.சி மையங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைகளுக்கான ஏ.பி.சி சட்டத்தில் மேலும் தளர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு மீண்டும் வேண்டுகோள் வைக்க உள்ளோம்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *