
மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25-ம் தேதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் 506 ஏக்கர் திடலில் ஆக. 25-ம் தேதி தவெக மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பந்தல்கால் நடும் விழா நேற்று காலை நடந்தது.
கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில், சிறப்பு பூஜைகளுடன் பந்தல்கால் நடப்பட்டது. மதுரை மாவட்டச் செயலாளர்கள் கல்லாணை என்ற விஜயன்பன், தங்கப்பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர், ஆனந்த் தலைமையிலான கட்சி நிர்வாகிகள், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று, மாநாடு நடத்த அனுமதி கோரி எஸ்.பி. அரவிந்திடம் மனு அளித்தனர்.