
சென்னை: திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு தீ விபத்து ஏற்பட்டது குறித்து ரயில் ஓட்டுநர், நிலைய அதிகாரி உட்பட 16 பேரிடம் சென்னை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நேற்று விசாரணை தொடங்கியது. திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே பெட்ரோல், டீசல் நிரப்பிக் கொண்டு 52 பெட்டிகளுடன் சென்ற சரக்கு ரயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இதனால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, அடுத்தடுத்து 18 டேங்கர்கள் எரிந்து நாசமாகின. இதனால் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சேதமடைந்த ரயில் தண்டவாளம், உயர்நிலை மின்பாதை, மின்கம்பங்கள் ஆகியவை அடுத்த 2 நாட்களில் முழுமையாக சீரமைக்கப்பட்டன. இந்த பாதைகளில் மின்சார, விரைவு ரயில்கள் தற்போது வழக்கம்போல இயங்குகின்றன.