• July 16, 2025
  • NewsEditor
  • 0

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் உலகையே உலுக்கியது. புத்தகப்பையுடன் முகம் சிரித்தபடி படிக்கச் சென்ற குழந்தைகள் கருகிய நிலையில் மீட்கப்பட்டதை கண்ட பெற்றோர் கதறி துடித்தனர்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து 21ம் ஆண்டு நினைவு நாள்

இந்த சம்பவம் நடந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் அனைவர் மனதிலும் ஆறாத வடுவாக இருந்து வருகிறது. “என் புள்ளை இருந்திருந்தால் வேலைக்கு போயிருப்பான், கல்யாணம் ஆகியிருக்கும் நாங்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்போம். ஆனால் அந்த கோரத் தீ எல்லாத்தையும் பொசுக்கி விட்டது. எங்க பிள்ளை அந்த தீ விபத்தில் எங்களை விட்டுட்டு போன பிறகு நடை பிணமாகத்தான் வாழ்கிறோம். கண்ணீர் சிந்தாத நாளில்லை” என பிள்ளைகளை பறிக்கொடுத்த பெற்றோர் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று 21ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதற்காக அந்த பள்ளி கட்டடம் முன்பு உயிரிழந்த குழந்தைகளின் போட்டோக்களுடன் ஃப்ளக்ஸ் வைக்கப்பட்டது. காலை முதல் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் வந்து அஞ்சலி செலுத்தினர். தங்கள் பிள்ளைகளுக்கு பிடித்த பழம், பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்கள், கூல்டிரிங்க்ஸ், பேனா உள்ளிட்டவற்றை வைத்தனர். மேலும் மலர் தூவி, மெழுகு வத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

கதறும் பெற்றோர்

பின்னர் அமைச்சர் கோவி.செழியன், எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன், அதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். விபத்தில் பிள்ளையை பறிகொடுத்த அம்மா ஒருவர், “நடந்தது ஒரு கனவாக இருக்க கூடாதா, நீ எங்கய்யா இருக்க, எங்கிட்ட வந்துருய்யா…” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினார். மற்றொருவர், “உன்னை வாழ வச்சிட்டு என்னை கொண்டு போயிருக்கக் கூடாதா அந்த தீ!” என துடித்தார்.

ஒவ்வொரு பெற்றோரும் வெளிப்படுத்திய வார்த்தைகளை 21 அண்டுகளுக்கு பிறகும் அந்த வடு அவர்கள் மனதை விட்டு அகலவில்லை என்பதை உணர்த்தியது. “எங்க பிள்ளைக்கு நடந்து யாருக்கும் நடக்கக் கூடாது, எல்லோரும் குழந்தைகளை பத்திரமா, கவனமா, எச்சரிக்கையா இருந்து பார்த்து கொள்ளுங்கள்” என்றும் கூறினர்.

“தீ விபத்து நாளை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம்.

கும்பகோணம் பள்ளி தீவிபத்து

அன்றைய தினத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உயிரிழந்த குழந்தைகளுக்காக நினைவு நாளை அனுசரிக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். ஆனால் இதுவரை அரசு இதனை செய்யவில்லை” என அஞ்சலி செலுத்திய பொதுமக்கள் தெரிவித்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *