
இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் உள்ள நியூனேட்டனைச் சேர்ந்த கிறிஸ் கான்சிடைன் (70) மற்றும் அவரது மனைவி சாண்ட்ரா (58) ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு தங்களின் மகளுக்காக இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு பிளாட்டை வாங்கியுள்ளனர்.
தற்காலிகமாக உதவி தேவைப்படும் ஒரு நண்பரை வாடகைக்கு அதில் வசித்து கொள்ள அனுமதித்துள்ளனர்.
வாரத்திற்கு £30 (இந்திய மதிப்பில் 3,453 ரூபாய்) வாடகை தருமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஏழு ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் அந்த குடியிருப்பாளர் இருந்துள்ளார்.
சமீபத்தில் அந்த வீட்டை சென்று தம்பதியினர் பார்த்தபோது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
வீடு முழுவதும் 3000-க்கும் மேற்பட்ட பீர் கேன்கள், சிறுநீர் நிரம்பிய பைகள், மலம் நிரம்பிய பைகள் என வீடே ஒரு குப்பை கிடங்காக மாறி இருப்பது கண்டு அவர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.
வீட்டு உரிமையாளரின் கூற்றுப்படி” கடந்த ஏழு ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை. வீட்டை பராமரிக்காமல் ஒரு குப்பை கிடங்காக மாற்றி உள்ளார்.
அந்த வீட்டில் யாருமே வாழ முடியாத அளவிற்கு மோசமாக அசுத்தங்கள் நிரம்பி உள்ளன. நாங்கள் இந்த வீட்டை அவருக்கு தற்காலிகமாக வாழ அனுமதித்தோம், அதில் சிறிது காலம் தங்கி ஓவியம் வரைவதற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு சொன்னோம். நண்பர் என்ற முறையில் மட்டுமே இவ்வாறு குறைந்த வாடகையை சொன்னோம்.
ஆனால் அவர் இவ்வாறு வீட்டை அசுத்தம் ஆக்கியுள்ளார். கருணையின் அடிப்படையில் நாங்கள் அவரை இந்த வீட்டில் தங்க அனுமதித்தோம். ஒருநாளும் அவரை வாடகைக்காரராக நாங்கள் பார்க்கவில்லை, நண்பராக தான் பார்த்தோம். ஆனால் அவர் இவ்வாறு செய்துவிட்டார்” என்று தம்பதியினர் கூறுகின்றனர்.
மீண்டும் இந்த பிளாட்டை புனரமைக்க தம்பதியினர் சிரமப்பட்டு வருகின்றனர். அவரது மகள் நிதி உதவி திரட்டவும் சுத்தம் செய்யும் செலவுகளை ஈடுகட்டவும் GoFundme என்ற பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.