
சிவகாசி அருகே திருத்தங்கல் சீ.ரா. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,000 பேர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், 12 ஆம் வகுப்பு பயிலும் இரு மாணவர்கள், மதிய உணவு இடைவேளைக்குப் பின் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த அரசியல் அறிவுப் பிரிவு ஆசிரியர் சண்முகசுந்தரம் இரு மாணவர்களையும் தடுத்து நிறுத்தி ஏன் மது அருந்தி வந்தீர்கள் என இருவரையும் தலைமை ஆசிரியரிடம் தெரிவிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இரு மாணவர்களும் தங்கள் கைகளில் வைத்திருந்த இரு வேறு மது பாட்டில்களை கொண்டு ஆசிரியர் சுந்தரமூர்த்தியின் தலையில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தலையில் பலத்த காயத்துடன் நிலை தடுமாறி விழுந்த ஆசிரியரை சக ஆசிரியர்கள் மீட்டு திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருத்தங்கல் காவல் நிலைய போலீசார் மது போதையில் ஆசிரியரை மது பாட்டிலால் தாக்கிய இருவரையும் பிடித்து வகுப்பறையில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், “கடந்த ஆண்டு நடந்த 11ஆம் வகுப்பு செய்முறை தேர்வில் ஆசிரியர் சண்முகசுந்தரம் செய்முறை தேர்வு மதிப்பெண்களை வேண்டுமென்றே குறைத்தார். இதனால் மன உளைச்சலில் ஆசிரியர் சுந்தரமூர்த்தியை தாக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தோம். அதனால் இன்று இருவரும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்தோம்” என முதல் கட்ட விசாரணையில் கூறியுள்ளனர். இதையடுத்து 2 மாணவர்களையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.

இதே பள்ளியில் கடந்த ஆண்டு மாணவர் ஒருவர் புத்தகப் பையில் மறைத்து வைத்து கொண்டு வந்த அறிவாலால் ஆசிரியரை தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளி வளாகத்தில் வைத்து மாணவர்கள் மதுபோதையில் ஆசிரியரை மது பாட்டிலால் கொலை வெறிதாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.