
சென்னை: “செஞ்சிக்கோட்டையை மராட்டியர்களின் கோட்டை என்று கூறுவது வரலாற்றுப் பிழை மட்டுமல்ல, அடுத்தத் தலைமுறையை திட்டமிட்டு ஏமாற்றும் சதி வேலையாகும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “காடவ மன்னர்கள் கட்டிய கோட்டையே செஞ்சிக் கோட்டை. யுனெஸ்கோ நிறுவனம், மகாராஷ்டிர மன்னன் சிவாஜி கட்டிய 12 கோட்டைகளில் ஒன்றாக விழுப்புரம் மாவட்டத்து செஞ்சிக்கோட்டையை அடையாளப்படுத்தி இருப்பது வரலாற்றை சிதைக்கும் கொடுஞ்செயல். ஏற்கெனவே பல்வேறு காலகட்டங்களில் பாடநூல்களில், அகழாய்வுகளில் தமிழர்தம் அடையாளத்தை சிதைக்கும் பணியை சிரமேற்கொண்டு மத்திய அரசு செய்து வந்திருக்கிறது. கடும் எதிர்ப்பு காரணமாக ஓரிரு அம்சங்கள் மாற்றப்பட்டிருந்தாலும், முழுமையாக அவற்றை மாற்ற வில்லை; முழுமையாய் அவற்றை மாற்றித் தீரவேண்டிய அந்தப் பணியே இன்னும் நமக்கு மிச்சம் இருக்கிறது.