
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை பாமக தலைவர் அன்புமணி விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” ஸ்டாலினின் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியால் கதை வசனம் எழுதப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் என்ற மோசடி நாடகம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களில் இயக்கத்தின் வெற்றிகரமாக அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளன. வெற்று விளம்பரத்திற்கான இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்பது முதல்நாள் நிகழ்வுகளில் இருந்தே அப்பட்டமாக அம்பலமாகியிருக்கிறது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் எந்த புதிய அம்சங்களும் இல்லை; பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியிருந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆண்டின் 365 நாள்களும் கிடைக்கக் கூடிய சேவைகளை, முகாம்களுக்கு வரவழைத்து கையேந்தி பெற வைக்கும் திட்டம் தான் இது என்று கடந்த வாரம் இதே நாளில் வெளியிட்ட அறிக்கையில் விரிவாக விளக்கியிருந்தேன். எனது குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்பதை இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவில் நடந்த நிகழ்வுகள் நிரூபித்துள்ளன.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட தொடக்க விழாவில், காதொலி கருவி கேட்டு விண்ணப்பித்த ஒருவருக்கு காதொலி கருவி, மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை கோரி விண்ணப்பித்த பெண்மணிக்கு காப்பீட்டு அட்டையும், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யக் கோரிய ஒருவருக்கு அதற்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ள.
இந்த பயனாளிகள் அனைவரும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்கூட்டியே விண்ணப்பம் பெறப்பட்டிருந்தது. இயல்பாகவே, இந்தக் கோரிக்கைகளுக்காக விண்ணப்பித்தால், ஓரிரு நாள்களில் அவை நிறைவேற்றப்படுவது வழக்கம் தான். ஆனால், அதற்காக ஒரு புதிய திட்டம், அதற்கான விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது ஆகியவை கண்டிக்கத்தக்கவை. அதனால் தான் இத்திட்டத்தை மோசடித் திட்டம் என பா.ம.க.குற்றஞ்சாட்டுகிறது.

உண்மையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு தான். 2026 தேர்தலில் திமுக படுதோல்வி அடைவது உறுதியாகி விட்ட நிலையில், அதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் திமுக, மக்களின் கவனத்தை ஈர்க்கவும், அரசின் செலவில் பரப்புரை செய்யவும் உருவாக்கியத் திட்டம் தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஆகும்.
இத்திட்டத்தின் அடிப்படை நகரப் பகுதிகளில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளையும்,ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளையும் வழங்குவது தான். இந்த சேவைகளை வீடுகளுக்கு அருகில் உள்ள இ&சேன மையங்களிலேயே பெற முடியும் எனும் நிலையில், இதற்காக நடத்தப்படும் முகாம்களுக்கு மக்கள் வரமாட்டார்கள். அதனால் தான், பெண்களை ஈர்க்கும் வகையில் கலைஞர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் இந்த முகாம்களில் மட்டும் தான் பெற்றுக்கொள்ளப்படும் என்ற கவர்ச்சியான அறிவிப்பை திமுக அரசு வெளியிட்டிருக்கிறது. ஆனால் இதுவும் கூட மக்களை ஏமாற்றும் வேலைதான்.
மாதம் ரூ.1000 பெறுவதற்கான மகளிர் உரிமைத் திட்டத்தில் சேருவதற்கு தேவையான ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து அளிக்கும்படி தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் நடைபெற்ற நூற்றுக்கணக்கான முகாம்களில் பல்லாயிரக்கணக்கான பெண்கள், மகளிர் உரிமைத் தொகை கோரி உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பம் செய்த ஒரு மணி நேரத்தில் பயனாளிகளுக்கு காதொலி கருவி, மருத்துவக் காப்பீட்டு அட்டை, மின் இணைப்பு பெயர் மாற்றம் ஆகியவற்றை செய்து தர முடிந்த தமிழக அரசுக்கு, மகளிர் உரிமைத் திட்ட மனுக்களையும் உடனடியாக ஆய்வு செய்து அடுத்த சில மணி நேரங்களில் ஆணை பிறப்பிப்பதும் தான் சாத்தியம் தான். அதன்படி இன்றே பல்லாயிரம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை வழங்கியிருக்க முடியும். ஆனால், தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் அதற்கான ஆணைகள் வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை.
முகாம்களில் மட்டுமல்ல… முகாம்கள் முடிவடைந்த பிறகும் கூட, பொங்கல் திருநாள் வரை உரிமைத்தொகை வழங்கப்பட போவதில்லை. காரணம் அதற்கான நிதி அரசிடம் இல்லை. இந்தத் திட்டத்திற்கு தேவையான 13,800 கோடி நிதி தேவைப்படும் நிலையில், அதை விட கூடுதலாக ரூ.7 கோடியை மட்டும் தான் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. அதைக் கொண்டு 5,833 பேருக்கு மட்டும் தான் கூடுதலாக உரிமைத் தொகை வழங்க முடியும். ஆனால், 10,000 மையங்களில் லட்சக்கணக்கான பெண்களிடமிருந்து விண்ணப்பங்களை வாங்க திமுக அரசு தீர்மானித்துள்ளது. ஆனால், அதற்கான பணம் அரசிடம் இல்லை.
என்பதால் நவம்பர் 14-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பெறப்போவதாகக் கூறி தாமதித்து விட்டு, பொங்கலுக்குப் பிறகு சில மாதங்களுக்கு மட்டும் பெண்களுக்கு உரிமைத் தொகையை அளித்து விட்டு ஏமாற்றுவது தான் தமிழக அரசின் நோக்கமாகும். இந்த ஏமாற்று வேலைகளுக்கெல்லாம் தமிழக மக்கள் மயங்க மாட்டார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது தான் திமுகவின் தேர்தல் வாக்குறுதி ஆகும். ஆனால், அதை செயல்படுத்தாமல் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் உரிமைத் தொகை கொடுத்து ஏமாற்றி வரும் திமுக அரசு, இப்போது அடுத்தப்பட்ட ஏமாற்று வேலைக்கு ஆயத்தமாகி வருகிறது. உண்மையாகவே மகளிருக்கு உரிமைத்தொகை வழங்குவதில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால், முகாம்களில் பெறப்படும் கலைஞர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிமைத் தொகையை வழங்க வேண்டும்.
நடப்பு மாதத்தில் எத்தனை பேருக்கு உரிமைத்தொகை புதிதாக கிடைக்கும்? மொத்தம் எத்தனை பேருக்கு உரிமைத் தொகை கொடுக்க வேண்டும்? அதற்கான நிதியை தமிழக அரசு எப்படி திரட்டும்? என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தமிழக அரசு வெளியிட வேண்டும். அதை விடுத்து வெறும் விளம்பரத்திற்காக மட்டும் அறிவிப்புகளை வெளியிட்டால், அது மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தும். எனவே, திமுக ஏற்கனவே வாக்குறுதி அளித்தவாறு அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என்று விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.