
திருநெல்வேலி: “ஆட்சியை இழந்து விடுவோம் என்ற பயம் திமுகவுக்கு வந்துவிட்டது. தோல்வி பயம் காரணமாக தமிழக முதல்வர் ஊர் ஊராக சென்று வருகிறார்.” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலி சந்திப்பு உடையார்பட்டியிலுள்ள பாஜக அலுவலகத்தில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்கள் விரோத திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதுதான் எங்களது நோக்கம். கடந்த சட்டப் பேரவை தேர்தல் நேரத்தில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, அதன் பிறகு தகுதி உள்ள பெண்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார். தகுதி உள்ள பெண்கள் யார் என்று இன்றுவரை தெரியவில்லை.