
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயதான பள்ளி மாணவி ஒருவர், நீலகிரியில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றில் தங்கி கல்வி பயின்று வந்திருக்கிறார்.
கடந்த 2020-ம் பொங்கல் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்குச் சென்ற அந்த மாணவி, 28- 01- 2020 அன்று பள்ளிக்குத் திரும்ப பேருந்துக்காகக் காத்திருந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக காரில் சென்ற இளைஞர் ஒருவர், ஏதோ சொல்லி மாணவியை காரில் ஏற்றியிருக்கிறார். மாணவி நிறுத்தச் சொன்ன இடத்தில் வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகத்தில் இயக்கிச் சென்று காரமடை பகுதிக்குக் கடத்திச் சென்றிருக்கிறார்.
அங்குள்ள தனியார் வொர்க் ஷாப் ஒன்றிற்கு மாணவியை மிரட்டியும் கட்டாயப்படுத்தியும் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார்.
மறுநாள் காலை மாணவியை அழைத்து வந்து நீலகிரி மாவட்ட எல்லையில் இறக்கிவிட்டுத் தப்பி ஓடியிருக்கிறார். இது குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவிக்க, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த 31 வயதான முரளி என்பவர்தான் இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டார் என்பதைக் கண்டறிந்த காவல்துறையினர், அவர் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஊட்டியில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடைசி மூச்சு வரை வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என அதிரடித் தீர்ப்பு விதித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், முரளிக்கு அபராதம் விதித்ததுடன் தமிழக அரசிடம் இருந்து 2 லட்சம் ரூபாயை இழப்பீடாகப் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட நிர்வாகம் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.