
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
இசை கலைஞரின் கடைக்குட்டி மகள் அனுசுயா . இரண்டு அக்கா.
அப்பா ஆசை, அன்போடு தைரியத்தையும் அளித்தார் தன் பெண்களுக்கு. பாரதி கனவு கண்ட பெண்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தார்.
வேண்டிய எச்சரிக்கையை கடைபிடிக்கவும் அதே சமயம் தைரியமாக வெளி உலகத்தில் இருக்கவும் சுதந்திரத்தையும் அளித்தார்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணம் வளர்ந்தனர் . கடைக்குட்டி அனுசுயா படிப்பில் சுட்டி. பாட்டு இயற்கையாகவே வந்தது. ஒருவர் பின் ஒருவராக படித்து வேலைக்கு செல்ல தொடங்கினர். ஆசையுடன் தன் மகள்களுக்கு திருமணம் நடத்தினர் பெற்றோர்.
அனுசுயாவிற்கு மத்திய அரசாங்க வேலை. கை நிறைய சம்பளம். கணவன் சொந்தமாக தொழில். நெஞ்சில் நல்ல நினைவுகள் எதிர்பார்ப்புகளை சுமந்து சென்னையிலிருந்து டில்லிக்கு கணவன் வீட்டிற்கு சென்றாள் அனுசுயா.
ஹனிமூனுக்கு ஆக்ரா. காதலின் சின்னம் தாஜ்மஹால். மகிழ்ச்சியின் உச்சியில் அனுசுயா.
சகஜ வாழ்க்கை தொடங்கியது. அனுசுயாவிற்கு வேலை டில்லிக்கு மாற்றலாகி போகத் தொடங்கினாள். காலை வேலைகளை முடித்த பிறகு 9 மணியளவில் கிளம்பிவிடுவாள்.
கணவன் மூர்த்தி சொந்த தொழில் என்பதால் பின்னர் கிளம்புவான்.
மாலை இவள் வீடு வரும் போது மூர்த்தியும் முன்னதாகவே வந்து சேர்ந்திருப்பான்.
களைப்புடன் வரும் அனுசுயாவிற்கு டீ போட்டு தர அவளும் நான் எவ்வளவு லக்கி, கணவன் கூடமாட உதவியும் செய்கிறார் என்று மகிழ்ச்சியும் அடைந்தாள்.
சில நாட்கள் சென்றன. ஒரு நாள் மதியம் தலைவலி . காய்ச்சல் வரும் போல் இருந்தது. பஸ்ஸை பிடித்து வீட்டிற்கு வந்து கதவை திறக்கலாம் என்று சாவியை பையில் இருந்து எடுக்க பூட்டு தொங்க காணோம். என்ன ஏது என்று யோசித்தவாறு கதவை தள்ளி பார்க்க கதவு திறந்து கொண்டது.
ஏதாவது பூட்டை உடைத்து திருட்டு நடந்து விட்டதோ என்று யோசித்து மிகவும் ஜாக்கிரதையாக ஹாலில் நுழைந்தாள். சாமான்கள் வைத்தது வைத்த வண்ணம் இருந்தன. முதலில் உள்ள அறையில் பீரோவை வேகமாக போய் பார்த்தாள். பூட்டியே இருந்தது.
அடுத்து இருந்த படுக்கை அறைப் போனாள்.
அங்கே கவுந்து படுத்த நிலையில் மூர்த்தி தூங்கி கொண்டிருந்தான்.
மூர்த்தியை தட்டி எழுப்பி ‘ என்னங்க. வாசல் கதவு தாழ்ப்பாள் போடவில்லை. இந்நேரத்தில் நீங்க வீட்டில் இருக்கீங்க.
உடம்பு ஏதாவது சரியில்லையா? எனக்கும் தலைவலி.காய்ச்சல் வராமாதிரி இருக்கு. அதான் கிளம்பி வந்துட்டேன்’ என்றாள் அனுசுயா.
மூர்த்தி வாரி சுருட்டிண்டு எழுந்தான்.
‘இன்னிக்கி சீக்கிரம் கிளம்பிட்டேன். என் ஆபிஸ் பக்கம் ஏதோ ஊர்வலம். மாட்டிண்டா அப்புறம் வீடு வர லேட் ஆகும். அதனால் கிளம்பி வந்துட்டேன் ‘ என்று சொல்ல அனுசுயாவும் ‘ நல்லதாச்சுங்க’ என்றாள்.

ஒரிரு நாட்கள் சென்றன. மாதம் முதல் தேதி. வீட்டு வாடகை மளிகை செலவு. மூர்த்தியிடம் நினைவு படுத்தினாள். ‘அனுசயா நீ உன் சம்பளத்திலிருந்து வாடகையை கொடுத்துவிடு . எனக்கு வர வேண்டிய பணம் இன்னும் சில நாட்களில் வந்து விடும் ‘ என்றான்.
இவளும் சரி என்று சொல்லி கொடுத்தாள்.
இரண்டு நாட்கள் செல்ல மூர்த்தியிடம் பணம் வந்ததா என்று கேட்க லேசான எரிச்சலுடன் ‘சும்மா பணம் பணம் என்று தொந்தரவு செய்யாதே ‘ என்றான். இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ தொழிலில் கஷ்டமா என்று யோசித்து பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பேச்சை விட்டு விட்டாள்.
அன்று மாலை மூர்த்தி வெளியே கிளம்பி போனான். இரவு 9 மணி. ஆளை காணோம். கவலையோடு எதிர் பார்த்து இருக்க 11 மணியளவில் கதவை தட்டினான். வேகமாக சென்று திறக்க லேசாக ஒரு வாடை அவனிடமிருந்து வந்தது. தூக்கி வாரிப் போட்டது அனுசுயாவிற்கு.
இது என்னங்க புது பழக்கம் என்று கூறியவாறு உள்ளே அனுமதித்தாள்.
காலையில் என்ன ஏது என்று விசாரிக்கனும் என்று நினைத்தவாறு உள்ளே சென்றாள்.
ஏதோ சரியில்லை என்று மனதில் பட்டது . சொந்தமாக தொழில். உறவினர் சொல்லியதில் அதிகம் விசாரிக்காமல் தன் குடும்பம் இவரை தேர்ந்தெடுத்ததோ என்று தோன்றியது.
மறு நாள் காலை மூர்த்தி எழுந்தவுடன் இவளிடம் மன்னிப்பு கேட்டான். தொழிலில் சிறிது பிரச்சினை. நண்பன் ஒருவனிடம் ஆலோசனை கேட்க போய் என்னை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தான் என்றான்.
இவளுக்கு நம்பிக்கை வரவில்லை. ஆயினும் மீண்டும் நேராமல் பார்த்து கொள்ளுங்கள் என்று கண்டிப்புடன் கூறி வேலைக்கு சென்றாள் .
அன்று மாலை வீடு திரும்ப, வழக்கமாக தனக்கு முன்னதாகவே வீடு வரும் மூர்த்தியை காணோம்.
நேரம் செல்ல செல்ல இவளுக்கு சந்தேகம் வந்தது. இரவு 11 மணியளவில் வீட்டு கதவை தட்டும் சத்தம்.
லேசாக திறந்து பார்க்க தள்ளாடிய நிலையில் மூர்த்தி. மது வாடை வேறு குமட்டிண்டு வந்தது அனுசுயாவிற்கு.
தொடர்ந்து கதவை மூர்த்தி தட்டிக் கொண்டே இருக்க காலை இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று நினைத்தவாறு உள்ளே விட்டாள்.
இதற்கிடையில் தான் கர்ப்பமாகி இருக்கிறோமோ என்று தோன்றிய அறிகுறிகளை வைத்து நினைத்தாள்.

கொஞ்சம் கொஞ்சமாக மூர்த்தியின் வேஷம் கலையத் தொடங்கியது. தொடர்ந்து சில நாட்கள் மாலை குடித்து விட்டு வீட்டுக்கு வர அனுசுயா தன் பொறுமையை இழந்தாள்.
இப்படிப்பட்ட வாழ்க்கை தனக்கு தேவையில்லை. தன்னம்பிக்கையும் தைரியமும் தன் கையில் இருக்க தனித்து வாழமுடியும் என்று தோன்றியது.
திட்டம் போடத் தொடங்கினாள்.
மூர்த்தியிடம் அதிகம் பேச்சு வைத்து கொள்ளாமல் தான் உண்டு தன் ஆபிஸ் வேலை என்று போய் வந்திருக்க மூர்த்திக்கு எதுவும் யூகிக்க முடியவில்லை.
ஆபிஸில் சென்னைக்கு மாற்றல் கேட்டு மனு கொடுத்தாள். நேரில் மேல் அதிகாரியிடம் நிலைமை எடுத்து சொல்லி இரண்டு வாரங்களில் சென்னைக்கு ஆர்டர் வந்து விட்டது.
மூர்த்தியிடம் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை. போய் பார்த்து ,. ஒரு பத்து நாட்கள் இருந்துவிட்டு வருகிறேன் என்று கூற அவனுக்கு சிறிதளவும் சந்தேகம் வரவில்லை.
தன்னுடைய உடைமைகள் ,எடுத்து வந்திருந்த நகைகளையும் கையில் எடுத்து கொண்டு ரயில் ஏறி சென்னை வந்தாள்.
பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி தனக்கு மூர்த்தியுடன் வாழ விருப்பமில்லை என்று கூற பெற்றோர் மனம் கலங்கினர்.
தீர விசாரிக்காமல் அவசரப்பட்டு திருமணம் செய்து விட்டோமே என்று எண்ணி வருத்தம் அடைந்தனர்.
ஆனால் மகளின் இந்த தைரியமான முடிவை வரவேற்றனர்.
சமூகத்தை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. தன் பெண் துணிந்து வெளியே வந்து எந்த வித பாதிப்பும் இல்லாமல் வந்து சேர்ந்தது அவர்களுக்கு மகிழ்ச்சியே.
அனுசுயா சென்னை ஆபிஸ் போய் வர தொடங்கினாள். இரண்டு வாரங்கள் சென்றும் அவள் திரும்பி வரவில்லை என்றவுடன் மூர்த்தி ஃபோன் போட்டு பேச முயற்சித்தான்.
டில்லியில் ஒரு பக்கம் கடன்காரர்கள் தொல்லை. அனுசுயா சம்பளம் வைத்து சமாளிக்கலாம் என்று நினைத்தது போக எல்லா எண்ணத்திலும் மண் விழுந்தது.
மூர்த்தி ரயிலை பிடித்து சென்னை வந்து அனுசுயாவின் பெற்றோர் வீட்டுக்கு வந்தான். அப்பொழுது தான் வேலையிலிருந்து திரும்பி வந்த அனுசுயா அவனிடம் முகம் கொடுத்து பேச விரும்பவில்லை. உள்ளேயும் அழைக்கவில்லை. வாசலில் அவளிடம் மன்றாடினான். தான் குடிப்பதை நிறுத்தி விட்டேன். டில்லி வந்து விடு. சேர்ந்து வாழலாம் என்று அழைத்தான்.
அனுசுயா மிகவும் தெளிவாய் இருந்தாள். இனி அவனுடன் சேர்ந்து வாழ இயலாது என்று.
தீர்மானமாக வரமுடியாது என்று கூறி விவாகரத்து கோரப் போவதாக கூறி கதவை மூடி உள்ளே சென்றாள்.
இதற்கிடையில் டாக்டர் கர்ப்பம் உண்டானதை உறுதி செய்ய உரிய நேரத்தில் நல்லபடியாக சுக பிரசவம். பெண் குழந்தை. மூர்த்தி குழந்தையை பார்க்க முயற்சித்தான். அனுசுயா அனுமதிக்கவில்லை. அதற்கு பிறகும் ஒரிருமுறை மூர்த்தி குழந்தையை பார்க்க முயற்சித்தான். அனுசுயா திட்டவட்டமாக மறுத்து விட்டாள். விவாகரத்திற்கும் மனு தாக்கல் செய்தாள்.
இதற்கிடையில் குடிப்பழக்கம் அதிகமாக ஒரு நாள் அவன் இறந்து போனான் என்ற செய்தி சில மாதங்கள் கழித்து அனுசுயா காதில் விழுந்தது.சிறிதும் வருத்தம் இல்லை.
பெற்றோரின் முழு ஆதரவும் இவளுக்கு இருந்தது.
குழந்தைக்கு படிப்போடு தைரியத்தை அளித்து வளர்க்க , வேலையில் அமர்ந்த பின் படித்த பண்புள்ள மனிதருக்கு திருமணம் செய்து வைத்தாள்.
இந்த இடைப்பட்ட காலத்தில் அனுசுயா வின் பெற்றோரும் மறைந்தனர்.
அனுசுயா வேலையிலிருந்து ஓய்வு பெற்று பேரக் குழந்தையுடன் ஆனந்தமான வாழ்க்கை இப்பொழுது.
தன் மகள் ஆபிஸில் பிரமோஷன் பெற்று தலைமை பொறுப்பில் இருப்பதை பார்த்து மிகவும் பெருமிதம் அனுசுயாவிற்கு.
பாரதி கண்ட நனவு பெண்ணாக தான் வாழ்ந்த தோடு மட்டும் அல்லாமல் தன் மகளையும் புதுமைப் பெண்ணாக வளர்த்து ஆளாக்கிய அனுசுயா அனைத்து பெண்களுக்கும் முன் மாதிரி!
