• July 16, 2025
  • NewsEditor
  • 0

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து மாநாட்டுக்கான பந்தக்கால் விழா இன்று காலை சிறப்பாக நடந்தது.

பந்தக்கால் நடும் விழா

மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடந்தது.

இதனையடுத்து மாநாட்டிற்கு அனுமதி வேண்டி மதுரை மாவட்ட காவல் கண்கானிப்பாளரிடம் ஆனந்த் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், “தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரையில் இரண்டாவது மாநில மாநாடு நடத்துவதாக எங்கள் தலைவர் அறிவித்திருக்கிறார். இன்று காவல்துறையினரிடம் அனுமதி வேண்டியும், மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி-யிடம் மனு

கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு இடையூறு இல்லாமல் மாநாட்டை சிறப்பாக நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம், நிச்சயம் இது வெற்றி மாநாடாக இருக்கும்.

தலைவர் எதைத் தொட்டாலும் வெற்றியாகத்தான் இருக்கும். முதல் மாநாட்டில் கலந்துகொண்ட தொண்டர்களைவிட இரண்டாவது மாநில மாநாட்டில் அதிக அளவில் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். மொத்தம் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு மைதானம் அமைந்துள்ளது. தமிழ்நாடு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு சாதகமாக இருக்கும்” என தெரிவித்தார்.

பந்தக்கால் நடும் விழா

“அரசியல் மாநாடென்றாலே அது மதுரையில் நடத்தினால்தான் மக்கள் மத்தியில் கவனம் பெறும் என்ற வரலாற்றுப்பூர்வமான நம்பிக்கையுடன் நடத்துகிறார்கள். அதுமட்டுமின்றி ஆகஸ்ட் 25 ஆம் தேதி தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த நாள் என்பதாலும், அவர் பிறந்த மதுரையில் தன் கட்சியின் மாநாட்டை நடத்துவதன் மூலம் சென்ட்டிமென்ட்டாக சில மூவ்களைச் செய்வார்” என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *