• July 16, 2025
  • NewsEditor
  • 0

உலகில் எத்தனையோ வகை மீன்கள் இருந்தாலும், சாலமனுக்கு தனிச்சிறப்பு உண்டு. நன்னீரில் பிறந்து, கடல் நீரில் வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்ய மறுபடியும் தான் பிறந்த நன்னீர் நிலைக்கே திரும்பி வருபவை சாலமன். இது எப்படி சாத்தியம் என்கிற கேள்வியில்தான் விரிகிறது, சாலமன்களின் அதிசயமான வாழ்க்கைப் போராட்டம்.

Salmon Fish

”சாலமன்களின் கதையை அது பிறந்த நன்னீரில் இருந்து ஆரம்பிப்பதா, அல்லது வாழ்ந்த கடல் நீரில் இருந்து ஆரம்பிப்பதா என்று குழப்பமாக இருந்தாலும், என் உள்மனது சாலமன்களின் கதையை கடலில் இருந்தே ஆரம்பிக்க சொல்வதால், அங்கிருந்தே அதன் கதையை ஆரம்பிக்கிறேன்” என்கிற காட்டுயிர் ஆர்வலரும் எழுத்தாளருமான கோவை சதாசிவம், அதை விவரிக்க ஆரம்பித்தார்.

”குளிர்பிரதேச நாடுகளின் காடுகளில், இயற்கைக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக எத்தனையோ நன்னீர் நிலைகளும், நன்னீர் மீன்களும் இருக்கும். அமேசான் காடுகளில் உற்பத்தியாகிற நதிகளிலேயே சுமார் 2,600 வகை நன்னீர் மீன்கள் இருக்கின்றன. சின்னச்சின்ன வண்ண வேறுபாடுகளுடன் மொத்தம் 6 வகை சாலமன்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வண்ணங்களில் மட்டும்தான் வேறுபாடு; சாலமன்களின் வாழ்கையில் வேறுபாடில்லை.

Amazon rain forest
Amazon rain forest

நன்னீரில் பிறந்த சாலமன்கள், சில மாதங்களில் நன்னீரும் உப்புநீரும் சங்கமமாகிற கழிமுகப்பகுதியில் சில காலம் வாழும். பிறகு பசிபிக் பெருங்கடலை நோக்கி நீந்த ஆரம்பிக்கும். இதற்காக பல்லாயிரம் மைல் தொலைவு நீந்தும் சாலமன்கள். இதை வலசை என்றே சொல்ல வேண்டும். கடலில் 5 முதல் 7 ஆண்டுகள் வாழும் சாலமன்கள். இது, அதன் வகைகளைப் பொறுத்து மாறுபடும். சாலமன்கள், முதுகெலும்பில்லாத நீர்வாழ் உயிரினங்களையும், சிறிய மீன்களையும் உண்ணும்.

இனப்பெருக்க உணர்வு வந்த பெண் சாலமன்கள், தாங்கள் பிறந்த தாய்மடியான நன்னீர் நிலைகளை நோக்கிப் பயணப்பட ஆரம்பிக்கும். பெண்ணைப் பின்தொடர்ந்து ஆண் சாலமன்களும் தங்கள் பயணத்தை ஆரம்பிக்கும். கடலைக் கடந்து, கழிமுகத்தைக் கடந்து, பிறந்த நன்னீர் நிலைக்கு வருவதற்குள் சாலமன்கள் எத்தனை எத்தனை உயிர்ப்போராட்டங்களை சந்திக்கின்றன தெரியுமா..?

Bears hunting Salmon fish
Bears hunting Salmon fish

கூட்டங்கூட்டமாக நீர் நிலைக்கு மேலே துள்ளித்துள்ளி வலசை வருகிற சாலமன் மீன்களை, முதலில் திமிங்கலங்கள் வழி மறிக்கும். அவற்றிடம் தப்பிப்பிழைப்பவை சீல்களிடமிருந்தும், டால்பின்களிடமிருந்தும் உயிர் பிழைக்க வேண்டும். கழிமுகப்பகுதியில் இருந்து ஆறுகளுக்கு வருகையில் மனிதர்களிடம் பெரும்பாலான சாலமன்கள் தப்பிப் பிழைப்பதில்லை. அப்படியே பிழைத்தவையும் கரடிகளுக்கு உணவாகி விடும். கரடிகளின் பற்களுக்கு தப்பியவை பறவைகளிடம் சிக்கி விடும். தப்பிப் பிழைத்தவை, தாம் பிறந்த நன்னீருக்கு வந்து சேரும்.

சிறு மீன் குஞ்சாக நன்னீரை விட்டுப் பிரிந்து சென்று கடலில் பல வருடங்கள் வாழ்ந்த சாலமன்களால் எப்படி, தாம் பிறந்த நன்னீர் நிலையைக் கண்டடைய முடியும் என்பது இன்றைக்கும் முழுமையாக விளக்கமுடியாத ஆச்சரியமாக இருக்கிறது என்கிற ஆராய்ச்சியாளர்கள், அவற்றின் மரபணுக்களில் இருக்கிற வாசனை உணர்வும், நீரோட்டங்களில் இருக்கிற மின்காந்த அலைகளை உணர்தலுமே சாலமன்களுக்கு வழிகாட்டுவதாக இதுவரை நடந்த ஆய்வுகள் சொல்கின்றன என்கிறார்கள்.

Salmon fish
Salmon fish

சாலமன்கள் சலிக்காமல் பல்லாயிரக்கணக்கான தூரத்தை நீந்திக் கடப்பதற்கு ஏற்ப, அவற்றின் உடலில் 8 துடுப்புகள் இருக்கின்றன. சாலமன் வெகுதூரம் வலசை செல்கிற மீன் என்பதால், இவை சோர்ந்துபோகாமல் இருக்க இயற்கை இவற்றின் உடலில் சிறுசிறு நீர்ப்பைகளையும் கொடுத்திருக்கிறது. இவை மிதப்பதற்கு உதவுவதால், சாலமன்கள் சோர்ந்துபோகாமல் தான் பிறந்த நீர் நிலைக்கு வருகின்றன.

சரி, சாலமன்கள் பிறந்த நன்னீர் நிலைகளுக்கு வந்துவிட்டன. அதன்பிறகு என்ன நடக்கும்? ஒரு பெண் சாலமனுடன் சேர்வதற்கு பல ஆண் சாலமன்கள் சண்டையிடும். இந்தப் போராட்டத்தில் சில இறந்தும் போகும். ஆண்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில், பெண் சாலமன்கள் தங்களுடைய வாலைப் பயன்படுத்தி ஆற்றுக்கடியில் சிறுசிறு சரளைக்கற்கள் மற்றும் கூழாங்கற்களை நகர்த்தி ஆழமற்ற ஒரு கூடு போன்ற வடிவத்தை ஏற்படுத்தும். அதற்குள் ஆயிரக்கணக்கில் முட்டையிடும். சண்டையில் வெற்றிபெற்ற ஆண் சாலமன், அந்த முட்டைகளின் மேல் தன்னுடைய உயிரணுக்களைப் பீய்ச்சும். இதன்பிறகு, பெண் சாலமன் அந்தக் கூட்டை லேசான சரளைக்கற்களால் மூடி விடும். அடுத்த தலைமுறைக்கான வேலைகள் முடியும் நேரத்தில், கிட்டத்தட்ட அனைத்து சாலமன்களின் ஆயுளும் முடிந்திருக்கும். ஆராய்ச்சியாளர்கள், ‘பசிபிக் பெருங்கடலில் வாழ்ந்த சாலமன்கள் இனப்பெருக்கம் முடிந்தவுடனே இறந்துவிடுகின்றன. அட்லாண்டிக் கடலில் வாழ்ந்த சாலமன்களில் சில, மறுபடியும் கடலை நோக்கி தங்கள் பயணத்தை ஆரம்பிக்கின்றன’ என்கிறார்கள்.

கோவை சதாசிவம்
கோவை சதாசிவம்

அவை இட்டுச் சென்ற முட்டைகள் பொரிந்து, வெளிவந்த சாலமன் மீன் குஞ்சுகள், தங்கள் மூதாதைப் போலவே மெள்ள மெள்ள நகர்ந்து கழிமுகப்பகுதியில் வாழ்ந்து பழகி, கடலின் ஆழத்தையும் நீளத்தையும் நோக்கிப் பயணிக்கின்றன. மரபணுக்கள் காட்டும் வழியில் பயணத்தை ஆரம்பிக்கிற சாலமன்களின் வலசை பாதையில், மனிதன் புதிதாக ஓர் அணையைக் கட்டியிருக்கலாம். நீர்நிலைகளில் வீட்டுக்கழிவும், தொழிற்சாலைக் கழிவும் கட்டாயம் இருக்கும். நீர்நிலைகளின் கரையோர மரங்கள் வெட்டப்பட்டிருக்கும். அதிகரித்துவிட்ட மக்கள்தொகை, மோசமாக திட்டமிடப்பட்ட நகரம், அதிகமான சாலமன் நுகர்வு எனப் பல்வேறு காரணிகள் சாலமன்களை வேகவேகமாக அழித்துக்கொண்டே வருகின்றன” என்கிறார் கோவை சதாசிவம் வருத்தமாக.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *