
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக இரு வேறு வழக்குகளின் விசாரணை இன்று தொடங்கியது. இதற்காக முன்னாள் அதிமுக அமைச்சர், மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக சாத்தூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவீந்திரன் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விஜய் நல்லதம்பி, சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலர் உள்ளிட்ட வேலைகளுக்கு பலரிடம் பணம் பெற்று, ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி உட்பட 7 பேர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்ட விவரம் அறிந்து தலைமறைவானார் ராஜேந்திர பாலாஜி. 18 நாட்களுக்கு பின் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி கர்நாடகா மாநிலத்தில் வைத்து தமிழக போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2023 ஜனவரி மாதம் ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் முன்னாள் அமைச்சர் மீதான மேல் விசாரணைக்கு ஆளுநர் அனுமதி வழங்காததால் நிலுவையில் இருந்து வந்தது.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி ரவீந்திரன் சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடைவிதிக்கக்கோரி ராஜேந்திர பாலாஜி, சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூரில் மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றமான நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.2-ல் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது இரு வேறு வழக்குகளிலும் ஆன்லைன் மூலம் 16.04.25 அன்று குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்கானது மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார். வழக்கு விசாரணைக்காக மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார் முன்பு அவர் உள்ளிட்ட ஏழு பேர் ஆஜரான நிலையில், இரு வேறு வழக்குகளும் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி விசாரணை துவங்குமென ஒத்திவைக்கப்பட்டது.