• July 16, 2025
  • NewsEditor
  • 0

கேரள மாநிலம் கோழிக்கோடு பந்தீரங்காவு குன்னத்து பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஷிபின் லால். இவரது மனைவி கிருஷ்ண லேகா.

கடந்த மாதம் 11-ம் தேதி பந்தீரங்காவில் உள்ள ஒரு தனியார் வங்கிக்குச் சென்ற ஷிபின்லால், ‘ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் 40 லட்சம் ரூபாய்க்கு நகைகள் அடகுவைத்திருக்கிறேன், அந்த நகையை மீட்டு உங்கள் வங்கியில் அடகு வைக்கிறேன். அதற்கு 40 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது’ என தெரிவித்தார்.

அதை நம்பிய வங்கி அதிகாரி, தனியார் பைனான்ஸுக்கு ஊழியர் பணத்தை கொண்டுவருவார் எனவும். நீங்கள் நகையை திருப்பியதும் அவரே எங்கள் வங்கிக்கு எடுத்து வந்து அடகு வைத்து தருவார் எனவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தனியார் வங்கி ஊழியர் 40 லட்சம் ரூபாய் பணத்தை பேக்கில் வைத்து எடுத்துச் சென்றுள்ளார். பைனாஸ் முன்பு வங்கி ஊழியர் சென்ற சமயத்தில் பைக்கில் வந்த ஒருவர் பணம் இருந்த பையை பறித்துவிட்டு தப்பிவிட்டார்.

இதுகுறித்து, வங்கி ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தியதில், ஷிபின் லால் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. ஷிபின்லாலை 2 நாள்களுக்குப்பின் பாலக்காட்டில் வைத்து போலீஸார் கைதுசெய்தனர். ஷிபின்லாலிடம் இருந்து 55,000 ரூபாய் அப்போது பறிமுதல் செய்யப்பட்டன.

மீதமுள்ள 39 லட்சம் ரூபாயை மீட்கும் விதமாக ஷிபின்லாலை இரண்டு முறை போலீஸார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினர். ஆனால், தனக்கும் அந்த கொள்ளைக்கும் சம்பந்தம் இல்லை என ஷிபின்லால் கூறிவந்தார்.

இந்த நிலையில், போலீஸ் விசாரணையில் ஷிபின் லால் தனது வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலத்தில் புதைத்து வைத்துள்ளதாக ஒப்புக்கொண்டார்.

கொள்ளையடித்த பணம் புதைத்து வைக்கப்பட்ட இடத்தில் போலீஸார்

அதைத்தொடர்ந்து போலீஸார் அங்கு சென்று நிலத்தை தோண்டியபோது ஒரு பேக்குக்குள் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் 500 ரூபாய் பணக்கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சில தண்ணீரில் நனைந்த நிலையில் ஈரமாக காணப்பட்டன. சில கட்டுகளில் இருந்த பணம் கிழிந்த நிலையில் காணப்பட்டன. பணத்தை எண்ணி பார்த்தபோது அதில் மொத்தம் 39 லட்சம் ரூபாய் இருந்தன. 45,000 ரூபாயை உறவினர் தின் ரஞ்சுவுக்கு கொடுத்ததாக ஷிபின்லால் தெரிவித்திருக்கிறார்.

ஷிபின்லாலுக்கு உதவியதாக அவரது மனைவி கிருஷ்ண லேகா, அவர்களது உறவினர் தின் ரஞ்சு ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறுகையில், “ஷிபின் லால் கோழிக்கோடு நகரத்தில் பல்வேறு வங்கிகளில் இருந்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார். கடனை அடைப்பதற்காக குறுக்குவழியில் திட்டம் போட்டுள்ளார். அதன்படி, பைனான்ஸில் நகை அடகுவைத்திருப்பதாகவும், அதை மீட்டு மறு அடகு வைக்க வேண்டும் எனவும் பொய்யாக கூறி 40 லட்சம் ரூபாயுடன் தனியார் வங்கி ஊழியரை வரவழைத்திருக்கிறார்.

வங்கி ஊழியரிடம் கொள்ளையடித்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஷிபின் லால்

பின்னர் தனது உறவினர் உதவியுடன் வங்கி ஊழியரிடம் இருந்து 40 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துள்ளார். கொள்கைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என ஷிபின் லால் முதலில் கூறிவந்தார். ஆனால், ஒரு வங்கியில் கடனாகப்பெற்ற 70 லட்சம் ரூபாயில், 35 லட்சம் ரூபாயை திரும்ப செலுத்துவதற்கான நடவடிக்கையில் தனது நண்பர் மூலம் ஈடுபட்டார். இந்த ரகசிய தகவல் கோழிக்கோடு சிட்டி போலீஸ் கமிஷனருக்கு கிடைத்தது. அதைத்தொடர்ந்தே ஷிபின்ல் லால் பணத்தை கொள்ளையடித்து மறைத்து வைத்திருப்பதை உறுதிசெய்தோம். தொடர்ந்து விசாரணை நடத்தி பணத்தை மீட்டோம்” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *