
வனங்கள் நிறைந்த நீலகிரியில் வனத்திற்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
அண்டை மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளைப் போல் ஊடுருவி வனவிலங்குகளை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் வேட்டை கும்பல் ஒருபுறம் என்றால், நாட்டு வெடி மற்றும் சுருக்கு வலை கம்பிகள் மூலம் முயல், காட்டுப்பன்றி, கடமான்களை வீழ்த்தும் உள்ளூர் கும்பல் மறுபுறம் எனப் போட்டிப்போட்டு வனவிலங்குகளை அழித்து வருகின்றனர்.
தேயிலைத் தோட்டங்களில் வைக்கப்படும் சுருக்கு வலை கம்பிகளில் புலி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் சுருக்கில் சிக்கி சிறுத்தைகள் இறப்பது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், கோத்தகிரி அருகில் உள்ள நெடுகுளா பகுதியில் தனியார் தேயிலைத் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த சுருக்கில் சிக்கி பெண் சிறுத்தை ஒன்று கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் துயரம் நடைபெற்ற தோட்டத்திற்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கும் இடையே 500 மீட்டர் இடைவெளி என்பதுதான் வேதனையான உண்மை. வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வைக்கப்படும் சுருக்கு கம்பிகளைக் கூட வனத்துறை பணியாளர்கள் கண்டறியாதது ஏன் என்ற கேள்வியினை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்.

இது குறித்துத் தெரிவித்த இயற்கை மற்றும் வன உயிர் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த சாதிக் அலி, “வனவிலங்குகளின் வழித்தடங்களில் சுருக்கு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய வனப் பணியாளர்கள் மூலம் தொடர் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ திட்டத்தைப் போலவே ‘ஃபிரண்ட்ஸ் ஆஃப் ஃபாரஸ்ட்’ குழுவை தன்னார்வலர்கள் மூலம் உருவாக்க வேண்டும்.
கிராமங்கள் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வனக்குற்றங்களை உடனடியாகக் கவனத்திற்குக் கொண்டு வரும் வகையில் சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ள இன்ஃபார்மர்களை உருவாக்க வேண்டும் .
தொடர்ந்து சிறுத்தைகளைக் காவு வாங்கும் சுருக்கு கம்பிகளை ஒழிக்க வனத்துறை என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை” என்றார்.

இது குறித்துத் தெரிவித்த வனத்துறையினர், “சுருக்கு கம்பிகளைக் கண்டறியத் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பயிற்சி பெற்ற மோப்ப நாய்களையும் ஈடுபடுத்த இருக்கிறோம்” என்றனர்.