
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது எலக்ட்ரிக் கார் விற்பனையை தொடங்க திட்டமிட்டு இருந்தது. எப்போது கார் விற்பனை தொடங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் டெஸ்லாவின் முதல் ஷோரூம் இந்தியாவில் பொருளாதார தலைநகரமாக விளங்கும் மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் திறக்கப்பட்டுள்ளது.
மேகர் மேக்சிடி மாலில் 4,000 சதுர அடியில் திறக்கப்பட்டுள்ள இந்த ஷோரூம்பிற்கு மாத வாடகை ரூ.35 லட்சம் ஆகும். Tesla Experience Centre என்று அழைக்கப்படும் அந்த ஷோரூமின் முன்பகுதி டெஸ்லா லோகோவால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திறப்பு விழாவிற்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வருகை தந்தார். அவரை டெஸ்லா நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர். ஷோரூம் உள்பகுதியில் வெள்ளை கலர் டெஸ்லா கார் பாதி மறைக்கப்பட்ட நிலையில் பார்வைக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
முதல் முறையாக இந்தியாவில் கால் பதித்துள்ள டெஸ்லா நிறுவனம் முதல் கட்டமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்யும். இந்தியாவில் டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பது குறித்து இன்னும் டெஸ்லா நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை. முதல் கட்டமாக Long Range RWD மற்றும் Long Range AWD ஆகிய இரண்டு வகையான ஒய் மாடல் எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அறிமுக விழாவிற்காக சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து 6 எலக்ட்ரிக் எஸ்.யு.வி கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கார் லாரியில் கொண்டு வந்து இறக்கப்பட்ட வீடியோ எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி இருந்தது.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள காரின் உள்பகுதியில் 15.4 டக்ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜிங், யு.எஸ்.பி-போர்ட், வாய்ஸ் கமாண்ட், இண்டர்நெட், செயலி மூலம் காரை இயக்குவது போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருக்கிறது. இக்காரின் விலை 59.89 முதல் 67.89 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கார் கிரே கலரில் கிடைக்கும். வாடிக்கையாளர் விரும்பும் பட்சத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்துக்கொண்டு கலர் மாற்றிக்கொடுக்கப்படும்.
காரில் செல்ப் டிரைவ் வசதி வேண்டுமானால் அதற்கு கூடுதலாக 6 லட்சம் செலுத்த வேண்டும். காரின் முன்பதிவு கட்டணம் ரூ.22,220 ஆகும். முன்பதிவு செய்த அடுத்த 7 நாட்களில் மேலும் மூன்று லட்சம் செலுத்தவேண்டும். கார் முன்பதிவை ரத்து செய்தால் இந்த கட்டணம் திரும்ப கொடுக்கப்படாது என்று டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மும்பையை தொடர்ந்து அடுத்த கட்டமாக டெல்லியில் ஷோரூம் திறக்கப்பட இருக்கிறது. மத்திய அரசு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் காருக்கு 70 முதல் 100 சதவீதம் வரி வசூலிக்கிறது. இதனால் இந்திய வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் டெஸ்லா கார்கள் கிடைக்க மத்திய அரசு காருக்கான வரியை குறைக்க வேண்டும் என்று மஸ்க் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் இந்தியாவில் கார்களை தயாரிக்கும்படி மத்திய அரசு கூறி வருகிறது. அது குறித்து டெஸ்லா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் அது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இந்தியாவில் ரூ.59.89 லட்சத்திற்கு(69,770 அமெரிக்க டாலர்) விற்பனையாகும் கார் அமெரிக்காவில் 44,990 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் பி.எம்.டபிள்யூ போன்ற ஆடம்பர கார்களுக்கு டெஸ்லா கார்கள் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் மாதம் 500 முதல் 700 கார்களை விற்பனை செய்ய டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெஸ்லாவின் குறைந்த விலை மாடலான மாடல்3 வகை கார்களும் ஷோரூம்பில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கார் அமெரிக்காவில் ரூ.25.99 லட்சத்திற்கு விற்பனையாகிறது. ஆனால் அதிக வரி காரணமாக இக்கார் இந்தியாவில் 40 லட்சத்திற்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்ஸ்ட் ஒன்றாம் தேதியில் இருந்து இந்தியாவில் டெஸ்லா கார் டெலிவரி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb