
தியேட்டர்களின் டிக்கெட் விலை ஏற்றங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பது கர்நாடக சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கை.
சாதாரண நாள்களில் ரூ.100 முதல் ரூ.250 வரையிலும், நட்சத்திரங்களின் திரைப்படங்களின் வெளியீட்டின்போது ரூ.1000 வரையிலும் டிக்கெட்கள் விற்கப்படுகின்றன. மல்டிபிளக்ஸ் திரையரங்களில் சாதாரணமாகவே டிக்கெட் விலை ரூ.200 தாண்டித்தான் இருக்கிறது.
கட்டுப்பாடற்ற இந்த டிக்கெட் விலைகளை முடிவுக்குக் கொண்டுவர 2017-ம் ஆண்டு தற்போதைய முதல்வர் சித்தராமையா முதல்வராக இருந்த போது இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். அப்போது இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதை தள்ளிவைத்துவிட்டது.
மேலும், 2021-ம் ஆண்டு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு ஆதரவாக கர்நாடக உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. ஐமாக்ஸ், 4டிஎக்ஸ் வகை தியேட்டர்களுக்கான விலை நிர்ணயத்தை தியேட்டர்காரர்களே அமைத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்தது. அது தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் கட்டுப்பாடற்ற இந்த டிக்கெட் விலைகளை முடிவுக்குக் கொண்டுவர சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு புதிய சட்ட வரைவு ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறது.
அந்தச் சட்ட வரைவின்படி மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட கர்நாடகாவில் இருக்கும் அனைத்துத் திரையரங்கிலும் வரிகளையும் சேர்த்து ரூ.200க்கு மேல் வசூலிக்கக் கூடாது என்று கர்நாடக சினிமாஸ் ஒழுங்குமுறை விதிகளின் படி திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சட்டவரைவு குறித்து 15 நாள்களுக்குள் கருத்துத் தெரிவிக்க கர்நாடக அரசு கால அவகாசம் கொடுத்திருக்கிறது. இந்தக் கருத்துக் கேட்பிற்குப் பிறகு இந்தப் புதிய திருத்தம் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…