• July 16, 2025
  • NewsEditor
  • 0

புதுக்கோட்டைப் பஞ்சாயத்து!

கடந்த ஆண்டு நகராட்சியாக இருந்த புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அந்த சமயத்தில் மாநகர செயலாளராக இருந்த செந்தில் என்பவர் உயிரிழந்தார். செந்தில் அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான நேருவின் தீவிர ஆதரவாளராக அனைவராலும் அறியப்பட்டவர். செந்திலின் மரணத்துக்கு பிறகே புதுக்கோட்டையில் சலசலப்பும், சர்ச்சைகளும் கடுமையாக உருவெடுத்தன.

காலியாக இருக்கும் மாநகர செயலாளர் பதவிக்குக் கடுமையான போட்டி நிலவியது. அந்த இடத்துக்குப் புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துராஜ் ஒரு பக்கம் முயற்சி செய்துகொண்டிருந்தார். அதே நேரத்தில் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா தனது ஆதரவாளரான ராஜேஷ் என்பவருக்குப் பதவி வாங்கி கொடுக்க அன்பில் மகேஸ் மூலம் முயன்று கொண்டிருந்தார்.

நிர்வாகிகள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் தனது ஆதரவாளருக்காக முயற்சி செய்துகொண்டிருந்தார். இந்த முயற்சிகள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும்போதே, அமைச்சர் நேரு, செந்தில் இடத்துக்கு அவரது குடும்பத்திலிருந்து யாரையாவது பொறுப்புக்குக் கொண்டுவரத் தலைமையிடம் பேசி முயற்சி செய்துகொண்டிருந்தார்.

இத்தனை முயற்சிகளும் நடந்துகொண்டிருந்த நேரத்தில், அப்துல்லாவின் ஆதரவாளரான ராஜேஷ் என்பவருக்கு மாநகர செயலாளர் பதவி வழங்கப்பட்டதாக திமுக தலைமை கழகத்திலிருந்து அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பின் பின்னரே பஞ்சாயத்து வெடிக்க ஆரம்பித்தது.

நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்:

மார்ச் மாதம் இந்த அறிவிப்பு வெளியான சமயத்தில், மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்தது. புதுக்கோட்டையில் திருமண மண்டபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அங்கிருந்த நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்து தெருவில் ஆர்ப்பாட்டம் நடத்தத் தொடங்கினர்.

ஆளும் கட்சியினரே சாலைமறியல் செய்து மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ-வை மறித்தது கோஷங்கள் எழுப்பினர். அடுத்தடுத்து பிரச்னைகள் வெடிக்க நிர்வாகிகள் அறிவாலயம் வரவழைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. ராஜேஷுக்கு எதிர்ப்பு அதிகமாக இருந்தபோதிலும், அவரை மாற்றத் தலைமை தயாராக இல்லை. அடுத்தடுத்த மாதங்களிலும் நடைபெற்ற கட்சி ஆலோசனையைக் கூட்டங்களில் மாநகர செயலாளரை மாற்றச் சொல்லி வட்ட செயலாளர்கள் பலர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிர்வாகிகள் முற்றுகை

மாதங்கள் கடந்தபோதிலும் மாநகர செயலாளர் மாற்றப்படவில்லை. இந்த சூழலில் கடந்த எட்டாம் தேதி பி.எல்.ஏ கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அமைச்சர் நேரு வந்திருந்தார். அந்த சமயத்தில் அமைச்சரை வழிமறித்த புதுக்கோட்டை நிர்வாகிகள் மாநகர செயலாளரை மாற்றச்சொல்லி பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரமடைந்த நேரு, நிர்வாகிகளைக் கண்டித்தும் அவர்கள் வழிவிடவில்லை. எங்களைக் கட்சியிலிருந்து நீக்கினாலும் பரவாயில்லை, ராஜேஷை மாற்றியாகவேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர். கடைசியில் சுற்றியிருந்த காவலர்கள் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் நிலை உருவாகியது. இந்த சம்பவம் திமுக-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் மாநகர பிரிப்பு நடந்திருக்கிறது.

பிரிக்கப்பட்ட மாநகரம்!

பஞ்சாயத்து வெடித்துக் கொண்டிருந்த நிலையில் புதுக்கோட்டை மாநகரம் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருப்பதாக திமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து அறிவாலய சீனியர்கள் சிலரிடம் பேசினோம்.

“ராஜேஷை மாற்றும் வரை இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை என்று நிர்வாகிகள் ரொம்பவே பிடிவாதமாக இருந்தார்கள். இதற்குப் பின்னணியில் புதுக்கோட்டை உள் அரசியல் இருந்தாலும், பிரச்னையை இப்படியே விடுவதும் நன்றாக இருக்காது. இதனால்தான் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக புதுக்கோட்டை நிர்வாகிகளை அழைத்து அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில், புதுக்கோட்டை மாநகரத்தை மூன்றாகப் பிரிக்கவேண்டும் என்று அமைச்சர் நேரு கோரிக்கை வைத்திருந்தார். அதே நேரத்தில் நிர்வாகிகள் அமைச்சரை வழிமறித்துப் போன்று இனி ஒருபோதும் நடந்துவிடக் கூடாது. நேரு சொல்வதைக் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பியிருந்தாராம் முதல்வர் ஸ்டாலின்.

நிர்வாகிகள் அறிவிப்பு

மாநகரத்தை மூன்றாகப் பிரித்து அதில் தனது ஆதரவாளர் ஒருவரை உள்ளே கொண்டுவரும் திட்டத்திலிருந்தார் நேரு. புதிதாக ஒரு இடத்தில் எப்படியாவது நாம் இடம்பிடித்துவிட வேண்டும் என்று முட்டி மோதிக்கொண்டிருந்தார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர். ஆனால், இரண்டாக மட்டுமே பிரிக்கவேண்டும் என்று தலைமையிடமிருந்து கண்டிப்பான உத்தரவு வந்தது.

இதனைத் தொடர்ந்தே புதுக்கோட்டை மாநகரம் வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரிந்து வடக்கு மாநகர பொறுப்பாளராக லியாகத் அலியும், தெற்கு மாநகர பொறுப்பாளராக ராஜேஷும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ஏகத்துக்கும் கடுப்பில் இருப்பது நேரு தரப்புதான் என்கிறார்கள். தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் லியாகத் அலி என்பவர் புதுக்கோட்டை மாநகர துணை மேயராக இருக்கிறார். இவர் மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியின் தீவிர ஆதரவாளராக அறியப்படுபவர். இத்தனை நடந்தும் புதுக்கோட்டை நிர்வாகிகள் கோரிக்கை வைத்த ராஜேஷ் மாற்றப்படவில்லை. மாறாகப் புதிதாக மாவட்டம் பிரிக்கப்பட்டு அவர் தொடர்கிறார் என்பது இன்னும் அங்குச் சிக்கல் மீண்டும் வெடிக்க வாய்ப்புகள் அதிகம்.” என்றார்கள் விரிவாக.

“இத்தனை மாதங்கள் ஆகியும் ராஜேஷ் அங்குள்ள நிர்வாகிகளுடன் சமாதானமாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எரிந்துகொண்டிருந்த பிரச்சனை எப்போது புகைகிறதே தவிர எப்போது வேண்டுமென்றாலும் மீண்டும் பற்றியெரிய வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள் புதுக்கோட்டை உடன்பிறப்புகள்.

என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *