• July 16, 2025
  • NewsEditor
  • 0

“ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சி மூலம் 91 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள் என்று மிகப்பெரிய புளுகு மூட்டையை உதயநிதி அவிழ்த்து விட்டுள்ளார்.” என்று, அதிமுக மருத்துவர் அணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் விமர்சித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 7 ஆம் தேதி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை கோவையிலிருந்து தொடங்கிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் கடல் அலைபோல திரண்டு எழுச்சியான வரவேற்பு அளிக்கிறார்கள்.

இன்றைக்கு தமிழகம் முழுவதும் எடப்பாடியாரின் அலை வீசுகிறது. அதைக்கண்டு ஸ்டாலினுக்கு ஜுரமும், அவர் மகன் உதயநிதிக்கு நடுக்கமும் வந்துவிட்டது. அதனால் தங்கள் இருப்பை கேட்டுக்கொள்ள நாள்தோறும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

திருவண்ணாமலையில் பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி டெபாசிட் வாங்க முடியாது என்றும், ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சி மூலம் 91 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள் என்றும் மிகப்பெரிய புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்.

தமிழகத்தில் 6 கோடிக்கும் அதிகமாக வாக்காளர்கள் உள்ளனர், இதில் 2 கோடிக்கும் அதிகமானோர் அதிமுகவில் உறுப்பினர்களாக உள்ளனர். அது மட்டுமின்றி எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தின் மூலம் ஒரு கோடிக்கும் மேலான வாக்காளர்கள் அவரை ஆதரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

திமுக கொடுத்த 525 தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவிகிதத்தைக்கூட நிறைவேற்றவில்லை. கேஸ் மானியம் ரூ 100, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து என்று எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தற்போது உணவுப்பொருள்களின் விலை 30 சதவிகிதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளதன் காரணமாக திமுகவுக்கு 10 சதவிகித வாக்குகள் சரிந்துவிட்டது.

டாக்டர் சரவணன்

அதனால் தாங்கள் செய்த தவறை மடைமாற்றம் செய்து பொதுமக்கள் திமுகவை மதிப்பதுபோல் ஒரு தோற்ற்ததை உருவாக்க ஓரணியில் தமிழ்நாடு என்று உறுப்பினர் சேர்க்கையை நடத்துகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு ஸ்டிக்கரை மட்டும் வீட்டு வாசலில் ஒட்டி வைத்துவிட்டு அதை உறுப்பினர் சேர்க்கை என்று கணக்கெடுத்துக்கொள்கிறார்கள்.

இன்றைய சூழலில் ஸ்டாலின் மீது மிகப்பெரிய எதிர்ப்பு அலை வீசுவதால் 2011 தேர்தலைப்போல் 2026 தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் திமுக இழக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் மலரும். திமுகவின் பொய்ப்பிரசாரம் மக்களிடம் ஒருபோதும் எடுபடாது” என்று தெரிவித்துள்ளார்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *