• July 16, 2025
  • NewsEditor
  • 0

தினமும் ஆயிரக்கணக்கான போன்கள் திருடப்படுகின்றன அல்லது தொலைந்து போகின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் Sanchar sathi ( சஞ்சார் சாதி) என்ற செயலியை கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலி, டிஜிட்டல் மோசடிகளை தடுக்கவும் போலியான அழைப்புகள் மற்றும் மோசடிகளில் புகார் அளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி, மக்களுக்கு பாதுகாப்பான தொலைத்தொடர்பு அனுபவத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

பயனர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் இணைப்புகளை சரிபார்க்க இந்த செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சம்பந்தப்பட்ட பயனர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் பேரில் இணைப்புகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவற்றை அறிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கவும் இந்த செயலி உதவியாக உள்ளது. மொபைல் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலும் அதை கண்காணிக்கவோ அல்லது முடக்கவோ இந்த செயலி உதவியாக இருக்கிறது.

CEIR (Central Equipment Identity Register) அமைப்புடன் இணைந்து, தொலைந்த மொபைல்களை முடக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி அன்றாடம் டிஜிட்டல் மோசடிகள் நடந்து வரும்நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஒரு மொபைல் போன் என்று எடுத்துக் கொண்டால் அதன் சிம் எப்படி வேலை செய்கிறது? எப்படி மோசடி நடக்கிறது? பயன்படுத்தப்படாத சிம் யாருக்கு செல்கிறது? என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

சிம் கார்டு எப்படி வேலை செய்கிறது?

சிம் கார்டு ( Subscriber Identity Module) என்பது மொபைல் போனில் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறிய மின்னணு சிப். இது மொபைல் எண்ணை அடையாளப்படுத்தி, மொபைல் நெட்வொர்க்குடன் இணைந்து செயல்படுகிறது.

சிம் கார்டில் IMSI (International Mobile Subscriber Identity) எனப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணும், சாதனத்தின் அடையாளத்தைச் சரிபார்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு அமைப்பும் (authentication key) சேமிக்கப்பட்டிருக்கும்.

இவை பயனர்களின் மொபைல் எண்ணை உறுதிப்படுத்தி, அழைப்புகள் செய்யவும், குறுஞ்செய்திகள் அனுப்பவும், இணையத்தைப் பயன்படுத்தவும் உதவுகின்றன. சிம் கார்டு ஒரு சிறிய கணினி போல செயல்படுகிறது.

eSIM என்ற புதிய தொழில்நுட்பம்

eSIM என்ற புதிய தொழில்நுட்பம் பிரபலமாகி வருகிறது. இது மொபைல் போனில் உள்ளமைக்கப்பட்ட டிஜிட்டல் சிம்மாக இருக்கிறது.

eSIM மூலம், வெளிநாடு செல்லும்போது சிம் கார்டை மாற்றாமல், எளிதாக நெட்வொர்க்குகளை மாற்றலாம். இது சிம் கார்டு தொலைவது அல்லது திருடப்படுவது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கிறது. இந்தத் தொழில்நுட்பம் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

பழைய சிம் எண், யாருக்கு போகும்?

ஒரு சிம் கார்டு நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அது செயலிழந்துவிடும். இந்தியாவில், டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) விதிகளின்படி, ஒரு மொபைல் எண்ணை மீண்டும் பயன்படுத்த, குறைந்தது 90 நாட்கள் காத்திருக்க வேண்டும். இது ஏற்கனவே இருந்த உரிமையாளரின் தகவல்களைப் பாதுகாக்க உதவுகிறது.

ஆனால், அதே குறிப்பிட்ட எண்ணை புதிய பயனருக்கு ஒதுக்கும்போது, முந்தைய உரிமையாளரின் தரவு முழுமையாக அழிக்கப்பட வேண்டும். அப்படி தரவுகள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றால், புதிய பயனருக்கு பழைய தொடர்பு எண்கள் அல்லது செய்திகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 90 நாட்களுக்கு பிறகு பயன்படுத்தாத சிம்கார்டு எண் வேறு பயனருக்கு சென்றுவிடுகிறது.

சிம் ஸ்வாப் மோசடிகள்

சில சமயங்களில் சிம் ஸ்வாப் மோசடிகள் நடக்கின்றன. அதாவது மொபைல் எண்ணை வேறு நபரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து புதிய சிம் கார்டு மாற்றி மோசடியில் ஈடுபடுகின்றனர்.

இப்படி நடக்கும்போது பயனர்களின், தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன, சம்மந்தப்பட்ட பயனர்களின் பிறந்த தேதி, ஆதார் விவரங்கள், முகவரி ஆகியவற்றை சேகரிக்கின்றனர். பின்னர், தொலைத்தொடர்பு நிறுவனத்தை ஏமாற்றி, உங்கள் எண்ணை புதிய சிம்முக்கு மாற்றுகின்றனர்.

தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்புகொண்டு மோசடி செய்பவர்கள், உண்மையான உரிமையாளர் போன்று காட்டிக்கொண்டு, “எனது சிம் கார்டு தொலைந்துவிட்டது” அல்லது “புதிய சிம் கார்டு தேவை” என்று கூறி, உங்கள் எண்ணை புதிய சிம்முக்கு மாற்றக் கோருகிறார்கள். அப்படி மொபைல் எண்ணை தங்கள் கட்டுப்பாட்டில் ஒரு புதிய சிம் கார்டுக்கு மாற்றுகின்றனர்.

இதனால், உங்கள் எண்ணுக்கு வரும் OTP-கள் (One-Time Passwords) அவர்களுக்கு செல்கின்றன. இந்த OTP-களைப் பயன்படுத்தி, உங்கள் வங்கிக் கணக்குகள், கிரிப்டோகரன்சி பணப்பைகள், மற்ற ஆன்லைன் கணக்குகளை அவர்கள் திருடுகிறார்கள்.

சமீபத்தில் கூட உத்தரகாண்டில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. மோசடி செய்பவர்கள் தொலைத்தொடர்பு ஊழியர்களாக நடித்து, மக்களை ஏமாற்றி, அவர்களின் எண்ணை மாற்றி, வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடியுள்ளனர்.

இதைத் தடுக்க தான் , இந்திய தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications) பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் 24 மணி நேர SMS தடை போன்ற புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிகள் மோசடிகளைக் குறைக்க உதவும் என்று கூறுகின்றனர்.

சிம் கார்டு காலாவதியானால் தரவு யாருக்கு கிடைக்கும்?

சிம் கார்டு காலாவதியானால், அதில் உள்ள தரவு தொலைத்தொடர்பு நிறுவனத்தால் அழிக்கப்பட வேண்டும். ஆனால், சில சமயங்களில், தொழில்நுட்ப கோளாறு அல்லது முறையற்ற அழிப்பு முறைகள் காரணமாக, தரவு முழுமையாக அழிக்கப்படாமல் இருக்கலாம்.

இதனால், புதிய பயனருக்கு உங்கள் பழைய தொடர்பு எண்கள் அல்லது குறுஞ்செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது உங்கள் தனியுரிமையை பாதிக்கக்கூடும்.

சிம் கார்டை மாற்றும்போது அல்லது கைவிடும்போது, அதிலுள்ள தரவை முழுமையாக அழிப்பது அவசியமாகிறது. இதற்கான தொலைத்தொடர்பு நிறுவனத்தை அணுகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒருவர் எத்தனை சிம் கார்டுகளை வாங்கலாம்?

இந்தியாவில், TRAI விதிகளின்படி, ஒரு நபர் தனது ஆதார் அடையாளத்துடன் அதிகபட்சம் 9 சிம் கார்டுகளை வாங்கலாம். இது மோசடிகளைத் தடுக்க உதவுகிறது. ஆனால், சிலர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த வரம்பை மீறுகின்றனர்.

திருடப்பட்ட தரவுகளை, ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான சிம் கார்டுகள் மோசடியாக வாங்கப்பட்டு, OTP உருவாக்கத்திற்காக வெளிநாட்டு குற்றவாளிகளுக்கு விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

சிம் ஸ்வாப் மோசடிகளைத் தவிர்க்க, பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை யாரிமும் பகிர வேண்டாம். ஆதார் விவரங்கள், வங்கி தகவல்கள் ஆகியவற்றை தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் சிம் மாற்றத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அமைப்புகளை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது செய்திகளைப் புகாரளிக்க, தொலைத்தொடர்புத் துறையின் சஞ்சார் சாதி இணையதளத்தை (https://www.sancharsaathi.gov.in/) அல்லது செயலியை பயன்படுத்தலாம். மொபைல் எண்ணில் திடீரென சேவை நிறுத்தப்பட்டால், உடனடியாக உங்கள் தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

சிம் ஸ்வாப் மோசடிகள் மற்றும் தரவு திருட்டு இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.

டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் புதிய விதிமுறைகள் மோசடிகளைக் குறைக்க உதவினாலும், உங்கள் விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் அவசியம். உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்து, சந்தேகத்திற்கிடமான எந்த அழைப்பு வந்தாலும் உடனடியாக புகாரளியுங்கள்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *