• July 16, 2025
  • NewsEditor
  • 0

கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னட பகுதியில் உள்ள ஒரு குகையில் ரஷ்யப் பெண் ஒருவர் தன் இரு மகள்களுடன் வசித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மலைக்குக் கீழே சுமார் 700–800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு குகையின் நுழைவாயிலில் துணிகள் தொங்கிக்கொண்டிருப்பதைக் கவனித்த காவல்துறை அதிகாரிகள், காட்டுப்பாதை வழியாக அந்தக் குகையை அடைந்தனர். அங்கே ஒரு சிறுமி குகையிலிருந்து வெளியே வந்திருக்கிறார். குகையைச் சுற்றி சிலப் பாம்புகள் திரிந்தன.

குகையிலிருந்து மீட்கப்பட்ட நினா குடினா

மீட்கப்பட்டக் குடும்பம்:

இதைப் பார்த்துப் பதறிய அதிகாரிகள் குகையிலிருந்த 40 வயது மதிக்கத்தக்க ரஷ்யப் பெண் நினா குடினா, இவரின் 6 வயது மகள் பிரேமா, 4 வயது மகள் அனா ஆகியோரை மீட்டு பாதுகாப்பானப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கப்பட்ட சில காய்கறிகள், மளிகைப் பொருள்கள் அங்கு இருந்தது. விறகுகளைப் பயன்படுத்தி சமைத்து சாப்பிட்டிருக்கின்றனர்.

மராட்டிய மாநிலத்தில் வழிபடப்படும் பாண்டுரங்க விட்டல் எனும் ஒரு கடவுள் சிலை அங்கு இருந்தது. ‘கிருஷ்ணர் தன்னை தியானம் செய்ய அனுப்பியதால், தவம் செய்து வருகிறேன்’ என அந்த ரஷ்யப் பெண் தெரிவித்திருக்கிறார்.

யார் இந்தப் பெண்?

2016 அக்டோபர் 18 முதல் 2017 ஏப்ரல் 17 வரை பிஸ்னஸ் விசாவில் இந்தியா வந்திருக்கிறார் நினா குடினா. விசா நேரம் முடிந்தப் பிறகு. கோவாவில் இருக்கும் வெளிநாட்டினருக்கான பதிவு அலுவலகம், ஏப்ரல் 19, 2018 அன்று இந்தியாவை விட்டு வெளியேறும் அனுமதியை வழங்கியது. அதன் பிறகு நேபாளம் சென்ற நினா குடினா, 2018 செப்டம்பர் 8 அன்று மீண்டும் இந்தியா வந்திருக்கிறார்.

அதன்பிறகு என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. நினா குடினாவின் பாஸ்போர்ட் தகவலின்படி ஆராயும் போது, நினா குடினாவுக்கு இருக்கும் குழந்தைகள் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும். அந்தக் குழந்தைகளின் தந்தை குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

குகையிலிருந்து மீட்கப்பட்ட நினா குடினா
குகையிலிருந்து மீட்கப்பட்ட நினா குடினா

உருக்கமான மெஸேஜ்:

நினா குடினா காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கும்போது வாட்ஸ் ஆப் மூலம் தன் தோழி ஒருவருக்கு ரஷ்ய மொழியில் எழுதிய மெஸெஜ் குறித்து காவல்துறை அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர்.

அதில், “எங்களின் குகை வாழ்க்கை முடிந்துவிட்டது. வானம் இல்லாத, புல் இல்லாத, நீர்வீழ்ச்சி இல்லாத ஒரு சிறையில் நாங்கள் தங்கவைக்கப்பட்டிருக்கிறோம். இங்குதான் மழையிலிருந்தும், பாம்புகளிடமிருந்தும் பாதுகாப்பாக இருக்க முடியும் எனக் கூறுகிறார்கள்.

ஒரு பாம்பு கூட தீண்டியதில்லை:

பல ஆண்டுகளாக காட்டில், திறந்த வானத்தின் கீழ், இயற்கையுடன் இணக்கமாக வாழ்ந்த என் உண்மையான அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன். குகையின் சுவரில் மழைநீர் பாய்வதை என்னால் கேட்க முடியும். மழை நீண்ட நேரம் பெய்தால், சுவர் கசியத் தொடங்கும். அப்போது குகை மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும், வசதியாகவும் இருக்கும். பாம்புகள் குகைக்குள் ஊர்ந்து செல்லும். கழிப்பறை, குளியலறை, சமையல் செய்யும் பகுதி வரை கூட வரும்.

பாம்புகள்
பாம்புகள்

ஆனால், அந்தக் குகையில் வாழ்ந்த இத்தனை ஆண்டுகளில் எங்களை ஒரு பாம்பு கூட தீண்டியதோ, தீங்கு விளைவித்ததோ இல்லை. ஒரு விலங்கு கூட எங்களைத் தாக்கவில்லை. காட்டில் இருக்கும் பாம்புகளை இவர்கள் கற்பனை செய்வது வேடிக்கையாக இருக்கிறது.

பாம்புகள் குகைகளுக்குள் வருவதும் செல்வதும் சாதாரண விஷயம்தான்… காடுகளில் பாம்புகள் கூட்டம் கூட்டமாக இருக்கும் எனவும், குவியலாக குவிந்து கிடப்பதாகவும் அவர்கள் கற்பனை செய்கிறார்களா? இது முழு முட்டாள்தனம். மழையின் போது பாம்புகள் கூட வேகமாக நகராது. எல்லா சாதாரண பொந்துகளில் இருக்கும்.

‘மழை’ இயற்கை:

அந்தக் குகையில் வாழ்வது குழந்தைகளுக்கு ஆபத்து எனக் கூறுகிறார்கள். இவர்களின் காடுகள் குறித்தக் கருத்துகள், குழந்தைத்தனமான விசித்திரக் கதைகளின் விளைவுகளால், அவர்களின் அச்சங்களை அடிப்படையாகக் கொண்டது. இவர்களின் இந்த எண்ணம் முழுமையான முட்டாள்தனம். முற்றிலும் ஆதாரமற்ற அச்சங்கள்.

‘மழை’ இயற்கை நமக்குத் தரும் அற்புதமான விஷயம். மழையில் வாழ்வதுதான் பெரிய மகிழ்ச்சியும், வலிமையும், ஆரோக்கியமும் தரும். அந்தக் குகை, இவர்களின் ஆடம்பரமான வீடுகளில் இருப்பது போலவே இருக்கும். இப்போது அதைவிட்டு வந்திருக்கிறோம். மீண்டும், தீமை வென்றுள்ளது.

இந்த மக்கள் மீது கருணையும், சுதந்திரமும் நிறைந்த, முட்டாள்தனமான குறுகிய மனப்பான்மையிலிருந்து விடுபட்ட, நல்ல வாழ்க்கை அமைய மனதார பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நீனா குடினா
நீனா குடினா

ஆழ்ந்த ஏமாற்றம்:

நினா குடினா அழைத்துவரப்பட்டப் பிறகு அவரிடம் பேசியது குறித்து உத்தர கன்னட காவல்துறை கண்காணிப்பாளர் எம்.நாராயணன் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டதில், “மனித சமூகத்தின் மீது ஆழ்ந்த ஏமாற்றமடைந்திருப்பது அவரின் பேச்சின் மூலம் அறிந்துகொண்டோம். ஆனால், அவர் இன்னும் இரக்கமுள்ளவராகவும், ஆன்மீக ரீதியில் உறுதியாக இருப்பதாகவும் தோன்றியது” என்றார்.

இறுதிப் பேட்டி:

இந்தியாவை விட்டுப் புறப்பட்ட நினா குடினா தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “இயற்கையோடு தங்கியதில் எங்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது. நாங்கள் அங்கிருந்தபோது இறக்கவில்லை. காட்டில் இறந்துபோவதற்காக நான் என் குழந்தைகளை அழைத்து வரவில்லை.

நாங்கள் இயற்கையை நேசிப்பதால் என் குழந்தைகள் பசியால்கூட வாடவுமில்லை. கிட்டத்தட்ட 20 நாடுகளின் காடுகளில் நான் வாழ்ந்திருக்கிறேன்… அந்தக் குகை, கிராமத்திற்கு மிக அருகில் இருந்தது.அந்தக் குகை தங்குவதற்கு ஆபத்தான இடமாக இருக்கவில்லை” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *