• July 15, 2025
  • NewsEditor
  • 0

சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்தும், இந்தியாவும் தலா ஒரு வெற்றி பெற்று சமனில் இருந்த சூழலில், ஜூலை 10-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது போட்டியில் இரு அணிகளும் மோதின.

முதல் போட்டிக்குப் பிறகு இரண்டாவது போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா மூன்றாவது போட்டியில் களமிறங்கினார்.

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுடன் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியினர்

மேலும், முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் சரியாக 387 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தை 192 ரன்களுக்கு இந்திய பவுலர்கள் சுருட்டினர். ஆனால், இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் 193 என்ற எளிய இலக்கை கூட எட்ட முடியாமல், 170 ரன்களுக்கு ஆள் அவுட் ஆகி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா.

181 பந்துகளில் 61 ரன்கள் என கடைசி வரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக நம்பிக்கையளித்துக் கொண்டிருந்த ஜடேஜாவின் போராட்டமும் வீணானது.

இங்கிலாந்து அணி தற்போது 2 – 1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இந்திய ஆடவர் அணியினரும், இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய மகளிர் அணியினரும், லண்டனில் உள்ள கிளாரன்ஸ் மாளிகையில் இங்கிலாந்து மூன்றாம் மன்னர் சார்லஸை நேரில் சந்தித்தனர்.

தொடர்ந்து, மன்னர் சார்லஸ் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் ஒவ்வொருவரிடமும் கைகுலுக்கி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஜஸ்பிரித் பும்ரா - இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ்
ஜஸ்பிரித் பும்ரா – இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ்

இதற்கிடையில், இந்திய வீரர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தும்போது, மன்னர் சார்லஸ் பும்ராவைப் பார்த்து “He looks terrific” என்றார். அதோடு, பும்ராவின் பவுலிங் குறித்தும் சார்லஸ் பாராட்டினார்.

இங்கிலாந்தில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய மகளிர் அணி, முதல்முறையாக இங்கிலாந்துக்கெதிரான டி20 தொடரை அதன் சொந்த மண்ணில் கைப்பற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *