
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் நர்ஸ் நிமிஷா பிரியா (34). நர்ஸிங் படித்துமுடித்த கையோடு 2008-ம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். 2011-ம் ஆண்டு தொடுபுழாவைச் சேர்ந்த டாமி தாமஸ் என்பவரை திருமணம் செய்தார். கணவர், மகளுடன் ஏமனில் வசித்துவந்தார். 2014-ல் ஏமன் நாட்டில் ஏற்பட்ட பிரச்னை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக டாமி தாமஸ் மற்றும் மகளும் கேரளா திரும்பினர். நிமிஷா மட்டும் ஏமன் நாட்டில் தனியாக தங்கி வேலைசெய்துவந்தார். இதற்கிடையே ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்துல் மஹ்தி என்பவரை பார்ட்னராக சேர்த்துக்கொண்டு தனியாக கிளீனிக் ஆரம்பித்தார் நிமிஷா. நிமிஷா பிரியாவின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு தலால் அப்துல் மஹ்தி அவரை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே 2017 ஜூலை 25-ம் தேதி தலால் அப்துல் மஹ்தி-க்கு அதிக அளவு மயக்க மருந்து கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றார் நிமிஷா பிரியா. இதில் தலால் அப்துல் மஹ்தி இறந்துவிட்டார். தப்பிக்க முயன்ற நிமிஷா போலீஸில் சிக்கினார். அந்நாட்டுச் சட்டப்படி விசாரணை நடத்தப்பட்டு 2020-ல் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஆணை நிமிஷா அடைக்கப்பட்டிருந்த சிறைக்கும் அனுப்பப்பட்டது. நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற ‘சேவ் நிமிஷா பிரியா இண்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. மேலும், நிமிஷாவை காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் நாளை நிறைவேற்றப்பட இருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. மரண தண்டனையை நிறுத்திவைப்பது சம்பந்தமாக கொலையான தலால் அப்துல் மஹ்தி-யின் குடும்பத்தாருடன் கேரளாவைச் சேர்ந்த சன்னி பிரிவின் தேசிய பொதுச்செயலாளர் காந்தபுரம் ஏ.பி. அபுபக்கர் முசல்யார் முயற்சியால், ஏமனில் சமரச பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. அதில், தயாநிதி எனப்படும் பிளட் மணி பெற்றுக்கொண்டு நிமிஷாவுக்கு மன்னிப்பு வழங்க தலால் அப்துல் மஹ்தியின் குடும்பத்தினர் ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்தே மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.