
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
1989 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த ரயில்வே துறை எழுத்துத் தேர்வுக்கு ஏ.வி.எம் ஸ்டூடியோ எதிரிலுள்ள கார்த்திகேயா பள்ளிக்கு என் கணவருடன் சென்றிருந்தேன். இயற்கை உபாதைகள் தணிக்கும் பொருட்டு அருகிலுள்ள பொது கட்டண கழிப்பறையை நாடினேன்.
அங்குள்ள பலகையில் 25 பைசா 50 பைசா என்று எழுதப்பட்டிருந்தது. நான் 25 பைசாவை அங்கிருந்தவரிடம் கொடுத்தேன். அவரோ 50 காசுகள் தந்துவிட்டு உள்ளே போகச் சொன்னார். நானும் திரும்பி வந்து என்னவரிடம் 50 காசு வாங்கி வந்து தந்துவிட்டு உள்ளே சென்றேன்.
காலைக் கடனை முடித்துவிட்டு வெளியே வந்த என்னை மீண்டும் அந்த நபர் அழைத்தார். தேர்வுக்கான நேரம் நெருங்கிய நிலையில் அவரை சபித்துக் கொண்டே திரும்பி ‘என்ன இன்னும் 50 காசுகள் வேண்டுமா’ என்று எரிச்சலுடன் ஆனால் அதை வெளிக் காட்டாமல் கேட்டேன்.
அவரோ அமைதியாக ‘இல்லையம்மா இந்தாருங்கள் மீதி 25 காசுகள்’ என்று திருப்பித் தந்துவிட்டார். நானும் வாங்கிக் கொண்டு வந்துவிட்டேன்.
தேர்வெழுதிவிட்டு வெளியில் வந்தவுடன் இதுபற்றி கணவரிடம் கூறினேன் மிக நீண்ட நேரம் இதற்கான காரணம் குறித்து யோசித்துக் குழம்பினோம். மதியத்திலிருந்து இரவு எட்டு மணிவரை எங்கு சுற்றினாலும் எதைப் பார்த்தாலும் என்ன வாங்கினாலும் இதே குழப்பம்தான்.
இறுதியாக சென்ட்ரல் நிலையத்தில் இதற்கான விடை கிடைத்தது. ரயிலுக்காகக் காத்திருந்த நேரத்தில் துப்புரவுப் பணித் தோழர்கள் மூவரின் உரையாடலை கவனிக்கச் சொன்னார் கணவர். ‘
ஒண்ணுக்குப் போனாலும் ரெண்டுக்குப் போனாலும் ஒரு ரூபா தான்னு தான் வாங்குவேன் – இது முதல் நபர் சரியான சில்லறை தராதவர்க்கு மீதிக்காசு தரமாட்டேன். இது இரண்டாம் நபர்.
அவசரமாகச் செல்பவரிடம் காசு வாங்கிக் கொள்வேன். டோக்கன் தரமாட்டேன். இது மூன்றாம் நபர்.
மூவரின் உரையாடலிலிருந்து காதுகளை விலக்கி என்னைத் தனியாக அழைத்து வந்த கணவர்’ இவர்கள் பேசுவதைக் கேட்டாயல்லவா! இவர்களில் யார் குற்றவாளி? சொல்’ எனக் கேட்டார்.
கோபமுடன் நான்’ எரிகின்ற கொள்ளியில் எது நல்லதெனக் கேட்டால் எப்படி சொல்வது. மூவருமே ஏமாற்றுக்காரர்கள். மூன்று பேருமே குற்றவாளிகள் தான்’ என்றேன்.
‘ஒரு நிமிஷம் யோசித்துப் பார். இவர்களை விட நீயே ஏமாற்றுக்காரி. நீயே குற்றவாளி,’ என்ற கணவரின் பேச்சால் தூக்கிவாரிப் போட நிமிர்ந்தேன்.
ஆமாம். அது அவர்கள் வாடிக்கை. ஆனால் உனக்கு?!
சிறுநீர் கழிக்க 25 பைசா மலங்கழிக்க 50 பைசா என்றிருந்திருக்கும். இரண்டாவதற்கென்று உன்னிடம் 50 காசுகள் வசூலித்த அந்த நபர் நீ போய்வந்த நேரத்தைக் கருத்தில் கொண்டு 25 காசைத் திருப்பிக் கொடுத்துள்ளார். அவரது நேர்மை எங்கே, காரணம் கேட்காமல் காசை வாங்கி வந்த நீ எங்கே.
பொதுக் கழிவறைகளை நீ உபயோகிக்கும் போதெல்லாம் அவரது நேர்மை உன்னை சுடும். இது அவர் தந்ததல்ல, உனக்கு நீயே தந்து கொண்ட சாபம்’ என்றார்.
உண்மை தான். நேர்மையைப் பற்றி நினைக்கும் போதும் கேட்கும் போதும் அந்தத் தோழரின் நினைவே இமயமாகத் தோன்றும். எனக்கு நானே குற்றவாளியாக உணர்வேன்.
இந்தப் படைப்பு அனைத்து நேர்மைப் பணியாளர்களுக்கும் சமர்ப்பணம்.
