
“மக்களைத் தேடி அரசு என்று சொல்கிறீர்கள், இந்த நான்காண்டுகளில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களை ஏமாற்றுவதில் கின்னஸ் சாதனை படைத்து வரும் ஸ்டாலின், இன்றைக்கு அதன் தொடர்ச்சியாக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அப்படியானால் ஏற்கனவே தொடங்கிய மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் காலாவதி ஆகிவிட்டதா? அல்லது மக்களுடைய கவனத்தை பெறவில்லையா?
அறிஞர் அண்ணா காலத்திலிருந்து மக்கள் தொடர்பு முகாம், திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட வெள்ளிக்கிழமை தோறும் அம்மா சிறப்பு திட்ட முகாம், எடப்பாடி பழனிசாமி காலத்தில் உருவாக்கப்பட்ட முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஆகிய முகாம்களெல்லாம் என்ன ஆயிற்று? நான்கு ஆண்டுகளில் இந்த முகாம்கள் மூலம் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லையா?
மக்களைத் தேடி அரசு என்று சொல்கிறீர்கள், இந்த நான்காண்டுகளில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? உங்களுடையது விளம்பர மாடல் அரசு என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலமாக நேற்றைய தினம் நீங்கள் வெளியிட்ட அறிவிப்பிற்கு எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை கேட்டு உள்ளார்
அரசு தகவல்களை நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் ஊடகங்களுக்கு எடுத்துரைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங்பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகியோர் மக்கள் நன்மதிப்பைப் பெற்றவர்கள். தனது ஆட்சியின் மூலம் நன்மதிப்பை இழந்த ஸ்டாலின், நம்பிக்கை இழந்த தன் அரசுக்கு, மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிற அதிகாரிகளை முன்னிறுத்தி அவர்களை முகமூடியாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார். அப்போதும் மக்களின் நம்பிக்கையை பெற முடியாது.

ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்களையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு இப்போது பக்கம் பக்கமாக விளம்பரம் செய்கிறார்கள். பொதுவாக செய்தித்துறை மூலமாகவே அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு இரண்டு ஐஏஸ் அதிகாரிகள் உள்ளனர், இப்போது மக்களின் நன்மதிப்பை பெற்ற 4 ஐஏஎஸ் அதிகாரிகள் மூலம் மக்களிடத்தில் செய்திகளை கொண்டு போய் சேர்த்தால் வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்தால் அது எடுபடாது. இந்த புதிய அறிவிப்பு, உங்கள் அரசின் தோல்வி என்பதை காட்டுகிறது.
பத்தாயிரம் முகாம்களில் என்ன தீர்வு காண்பீர்கள்? மின்சார கட்டணத்தை குறைப்பீர்களா? நிறுத்தி வைக்கப்பட்ட தாலிக்கு தங்கம், மடிக்கணினி, கண்மாய் தூர்வாரும் திட்டங்களை செயல்படுத்த மனு கொடுத்தால் செய்வீர்களா?
எடப்பாடி பழனிசாமி கேட்ட கேள்விக்கு இதுவரை ஸ்டாலின் பதில் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறார். நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அது தோல்வியில் தான் முடியும்” என்று தெரிவித்துள்ளார்.