• July 15, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

காலேஜ்  முடிஞ்சு  ஒரு  மாசம்  ஆகுது  இன்னும்  வேல  கெடைக்கலயான்னு  பாக்குறவங்க  எல்லாம்  கேக்க, கேக்கறவங்க  கேட்டுக்கிட்டு தான்  இருப்பாங்க  நாம  வேலையா தேடுவோம்னு  தேடிக்கிட்டே  இருக்க, உன் Resume குடு  நமக்கு  தெரிஞ்ச  கம்பெனி  இருக்கு, நான்  சேத்துவிடறேனு  ஒரு  நாலு  பேரு. 

இவங்க  கிட்ட  இருந்து  தப்பிச்சா  போதும்னு  பெங்களூருல  ஒரு  startup  கம்பெனிக்கு  போனேன். மூணு  மாசம்  probation-period, மாசம்  9000 சம்பளம்,  அதுல  2500 வாடகை, அளவா சாப்பிட்டு  மிச்சம் புடிச்சா  மாசம்  1000 கைல  நிக்க, அதா  வீட்டுக்கு  அனுப்பி  நானும்  ஒரு  கம்பெனில  வேலைக்கு  போறேன்னு  பெருமிதம்  பட்டுக் கொண்டிருந்த  சமயம், அவ கால்  பண்ணுனா. 

எப்போதும்  நான்  உன்ன  நெனச்சுக்கிட்டு  இருக்கேனு  சொல்லாம  சொல்ல  ஒரு  missed-call தன கொடுப்போம், ஏனென்றால்  STD வேற, ஒரு  நிமிடத்துக்கு  1.50 ரூபா  போய்டும். full-ring வருதே, அப்படி  என்ன  முக்கியமான  விஷயமா  இருக்கும்னு  ஆர்வத்தோட  கால்  எடுத்த, நம்ம  விஷயத்தை  எங்க  மாமா  கிட்ட  சொல்லிட்டேன், நீ  எங்க  மாமா  கிட்ட  பேசு  நான்  அவர்  நம்பர்  அனுப்புறேன் என்று சொன்னா.

நாம  என்ன  பேசுறது, என்கிட்ட  பேச  என்ன  இருக்கு? சொந்தமா  வீடு  இல்ல, சொல்லும்படி  ஒரு  வேல  கூட  இல்ல. சரி  எப்படியும்  எல்லாரோட  கேள்விக்கும்  பதில்  சொல்லித்தானே   ஆகணும், அதை   இன்னைக்கு, அவ  மாமா கிட்ட  இருந்தே  ஆரம்பிப்போம்  அப்டினு  ஒரு  தைரியத்தை  வர  வச்சுக்கிட்டு, கால்  பண்ணுனேன்.

அவ  மாமா  அந்த  பக்கம்  ஹலோ  என்றார், இந்த  பக்கம்  நான், வார்த்தை  வரல.. எப்படி  ஆரம்பிக்க? திரு  திரு  வென  விழித்தேன்.   ஒரு  நொடி  மௌனத்திற்கு  பிறகு, நான்  என்று  ஆரம்பிக்க, சொல்லு  கண்ணு, நல்லா  இருக்கியா? நீ  கூப்பிடுவேன்னு  சொன்னா  கண்ணு, உன்  நம்பர் குடுத்தா. வீட்ல  எல்லாரும்  நல்லா  இருக்காங்களா? அப்டினு  ரொம்ப  எதார்த்தமாக  பேசினார்  அவளின்  மாமா. 

இதை  நான்  எதிர்பார்க்கவே  இல்லையே. அவர் கேள்விக்கு  பதில்  அளித்துவிட்டு, நீங்க  எப்படி  இருக்கீங்க, அங்க  எல்லாம்  நலம் தானே  என்று  நான்  கேட்க, எல்லாவற்றிற்கும்  பொறுமையாக  பதில்  அளித்தார். கடிந்து  கொள்வார்னு  பார்த்தா  இவ்வளவு  அன்பா  பேசுறாரே  என்ற  ஆறுதல்  ஒரு  பக்கம்  இருக்க, நாம  எப்படி  விஷயத்தை  ஆரம்பிக்கிறது  என்று  முழித்துக்கொண்டிருக்க, அப்புறம்  வேற  என்ன  விஷயம்  கண்ணு  என்று  கேட்டார்.

இதற்கு  மேல்  யோசிக்க  எதுவும்  இல்லை  என்று  முடிவுடன், நான்  BE-Computer Science படித்திருக்கிறேன் , எங்களுக்கு  சொந்தமாக  வீடு, பூர்விக  சொத்து  என்று  ஏதும்  இல்லை, எனக்கு  தற்போது  சொல்லிக்கொள்ளும்  அளவிற்கு  ஒரு  நல்ல  வேலை  இல்லை, வேறு  நல்ல  வேலை  தேடிக்கொண்டு  இருக்கிறேன், சீக்கிரம்  கிடைத்துவிடும்  என்ற  நம்பிக்கை  இருக்கிறது  என்றேன்.

கண்டிப்பா  கிடைக்கும்  கண்ணு  என்றார். எனக்கு  அவள்  ஒரு  நல்ல  தோழி, எனக்கு  அவளை  மிகவும்  பிடித்திருக்கிறது, நான்  அவளை  திருமணம்   செய்துகொள்ள  விரும்புகிறேன்  என்று  கூறி  கண்ணை  இறுக்க  மூடிக்கொண்டேன். ரொம்ப   சந்தோஷம்  கண்ணு, இந்த  காசு, பணம், சொத்து  பத்து  எல்லாம்  இருந்த  மட்டும்  சந்தோசமா  வாழ  முடியாது, உங்கிட்ட  படிப்பு  இருக்கு, திறமை  இருக்கு, நம்பிக்கை  இருக்கு, அதோட  நல்ல  மனசு  இருக்கு.

அவ  எனக்கு  மச்சினிச்சி  இல்ல, அவளும்  எனக்கு  ஒரு  மக  தான், நீ  இதே  தைரியமும்  நம்பிக்கையோடு  இரு  கண்ணு, எல்லாம்  நல்லதே  நடக்கும், சரியா. நல்லா  சாப்பிடு, உடம்ப  பாத்துக்கோ, நான்  வெச்சுறேன்  கண்ணு  என்று  கூறி  அழைப்பை  துண்டித்தார். ஒரு  மன நிம்மதியோடு  அவளுக்கு  ஒரு  missed-call கொடுத்தேன், பதிலுக்கு  அவளும்  ஒரு  missed-call கொடுத்தாள்.

சிறிது  காலம்  போக, அவள்  வேலை பார்க்கும்  அதே  கம்பெனியில்  எனக்கு  வேலை  கிடைத்தது, அப்பாடா  என  நிம்மதி  பெருமூச்சு  விட, என்  அப்பா  மாப்பிள்ளை  பார்க்க  ஆரம்பிச்சுட்டார்  என்றாள். இது  என்னடா  விதி  கேப்  விடாம  அடிக்குது  என்று  எண்ணிக்கொண்டு, உன்  மாமா  என்ன  சொன்னார்  என்று  கேட்டேன்.

நீ  உங்க  வீட்ல  சொல்லிட்டா, நாம  எல்லாம்  சேர்ந்து  பேசி  ஒரு  நல்ல  முடிவு  எடுக்கலாம்  சொன்னார். அப்போ  அடுத்த  சீன  என்  வீட்லயா, சரி  நான்  பேசிட்டு  சொல்றேன்  என  கூறினேன். பசங்க  என்றாலே  அம்மா  தான்  translator to அப்பா ,  அதனால  அம்மா  கிட்ட  இருந்து  ஆரம்பிப்போம்  என்று  எண்ணி , என்  அம்மாவிடம்  கூறினேன். என்  அம்மா, என்  அப்பாவிடம்  கூற, அண்ணன் இருக்கும்  பொது  இப்போ  இவனுக்கு  என்ன  அவசரம்  என்று  கேட்டார்.

ஏன் தான்  இந்த  அண்ணனுக  எல்லாம்  காலகாலத்துல  கல்யாணம்  பண்ணாம  நமக்கு  பிரச்சனையாகவே  இருக்கானுகளோ, இதுக்கு மேல  இவனை  சும்மா  விட்டு வைக்க  கூடாது  என்று  மனதுக்குள்  கூறிக்கொண்டு, எனக்கு  ஒன்னும்  அவசரம்  இல்லப்பா, அவனுக்கு  ஒரு  வரன்  பார்ப்போம்னு  சொல்ல  வந்தேன்  என்றேன். அவன்  இப்போ, கல்யாணம்  வேண்டாம், இன்னும்  கொஞ்ச  நாள்  போகட்டும்ங்கறான், என்றார்.

அவன்  அப்படி  தான்  சொல்லுவான், நாம  தான்  சொல்லி  புரிய வைக்கணும், இப்போ  பாக்க  ஆரம்பிச்ச  தான்  அடுத்த  ஒரு  வருஷத்திலயாவது  முடியும்  என்றேன்.

தரகர் கிட்ட  சொல்லி  வச்சிருக்கு  நல்ல  வரன்  ஏதா  வந்தா  பார்க்கலாம்  என்றார். தரகர்  ஒரு  பக்கம்  பாக்கட்டும், இப்போ  எல்லாம்  மேட்ரிமோனி  தளங்கள்   நிறைய  இருக்கு, அதுலயும்  பாப்போம்  என்றேன். அதுக்கு  காசு  கட்ட வேண்டாமா  என்றார். முதல்ல  பாக்கலாம், ஏதா  ஒத்து வந்தா  அப்புறம்  காசு  கட்டிக்கலாம்  என்றேன். அப்போ  அவன்  போட்டோவ  போட்டு  விடு  என்றார். கவலைய  விடுங்க, எல்லாம்  நான்  பாத்துக்கறேன், இவனுக்கு  கல்யாணத்த  பண்ணிப்புட்டு  தான்  நான்  தூங்குவேன்  என்று  மனதில்  நினைத்துக்கொண்டு  உடனே  என்  அண்ணனுக்கு  ஒரு  profile தொடங்கினேன்.

சில  மாதங்கள்  கழிந்தன, ஜாதகம்  பொருந்திய படி  ஒரு  வரணும்  வந்தது. அப்புறம்  என்ன  பேசி  முடிச்சிடுங்க  என்றேன். உனக்கு  clear ஆகணும்னு   என்ன  முடிச்சுப்போட்டியேடா  என்றபடி  பார்த்தான்  என்  அண்ணன் .

நாங்க  பண்றது  எல்லாம்  உன்  நன்மைக்கு  தான், அது  இப்போ  உனக்கு  புரியாது  என்ற  படி, அவன்  திருமணத்தை  நடத்தி  முடித்தோம். அடுத்த  ஆறு  மாதத்தில்  எங்களது  திருமணமும்  நிச்சயிக்க  பட்டது. நேரம்  குறைவு, இருப்பு  தொகை  அனைத்தும்  அண்ணன்  திருமணத்திற்கு  செலவாகி  விட்டது  என்ன  செய்வது  என்று  என்  பெற்றோர்  யோசிக்க, அதுக்கு  என்ன  ஒரு  personal loan போட்டுக்கலாம், எவ்வளவு  வேணும்னு  சொல்லுங்க  என்றேன். ஏற்கனவே  housing loan போகுது  இதுல  personal loan வேறயா  என்றார்  என்  தந்தை. 

சில  வருடங்கள்  முன், நம்மிடம்  ஏதும்  இல்லை, இப்போது  ஒரு  சொந்த  வீடு  இருக்கிறது, எனக்கும்  அண்ணனுக்கும்  நல்ல  வேலை  இருக்கிறது, எல்லாம்  பாத்துக்கலாம், கவலையை  விடுங்கள்  என்றேன். 

அவள்  வீட்டிலும்  இதே  நிலை  தான், அவளுக்கும்  இதே  ஆலோசனை  தான், personal loan.

ஆறு  மாதங்கள்  கழிந்தன, எங்கள்  திருமணம் இனிதே நடந்து முடிந்தது , வாழ்க்கை Housing  loan , personal loan  ஓடு ஆரம்பித்தது.  

பதின்மூன்று வருடங்கள் கடந்து விட்டோம் , எங்களுக்கு என்று ஒரு சொந்த வீடு, ஆசையும் அன்பும் நிறைந்த எங்கள் மகள், வாழ்க்கையை வழிநடத்த துணை நிற்கும் எங்கள் பெற்றோர் என்று வாழ்க்கை அழகாக சென்று கொண்டு இருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *