• July 15, 2025
  • NewsEditor
  • 0

நேஷனல் ஸ்டாக் எக்ஸேஞ்ச் ஆஃப் இந்தியா (NSE) தற்போது புதிதாக எலக்ட்ரிசிட்டி ஃபியூச்சர்ஸை அறிமுகப்படுத்தி உள்ளது.

‘என்னது எலக்ட்ரிசிட்டி ஃபியூச்சர்ஸா… எலக்ட்ரிசிட்டியை வாங்குவது… விற்பதுவா?’ என்கிற கேள்வி எழுகிறது தானே. ஆம்… எலக்ட்ரிசிட்டியை வாங்குவது, விற்பது தான் எலக்ட்ரிசிட்டி ஃபியூச்சர்ஸ் என்கிறார்கள்.

ஃபியூச்சர்ஸில் தங்கம் மற்றும் கச்சா எண்ணெயை எப்படி வாங்கி, விற்கிறோமோ, அதே போல தான் இதுவும் என்று கூறப்படுகிறது.

பங்குச்சந்தை நிபுணர் சொக்கலிங்கம்

‘இப்போதும் புரியவில்லை…!’ என்பது உங்கள் மைண்ட் வாய்ஸ் என்றால், இதை தெள்ள தெளிவாக விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் சொக்கலிங்கம்.

‘இது இந்தியாவிற்கு புதிது அல்ல. IEX-ல் ஏற்கனவே இருந்தது தான். ஆனால், மோனோபோலியாக இருந்தது. தற்போது, பி.எஸ்.இ, என்.எஸ்.இ-யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பலர் வணிகம் செய்யப்போகிறார்கள்.

முன்பே, பி.எஸ்.ஐயில் தொடங்கப்பட்டது. லேட்டஸ்டாக, என்.எஸ்.இ-யிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Electricity Futures என்றால் என்ன?

எலக்ட்ரிசிட்டி ஃபியூச்சர்ஸ் என்றால் இதுவும் ஒரு வகை பங்குச்சந்தை போன்றது தான். பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கி, விற்பதுபோல, இதில் மின்சாரத்தை வாங்குவது, விற்பது ஆகும்.

இந்த இடத்தில் பெயரை உன்னிப்பாகக் கவனியுங்கள் எலக்ட்ரிசிட்டி ‘ஃபியூச்சர்ஸ்’. ஃபியூச்சர்ஸ் என்றதுமே எதிர்காலம் என்று கண்டுபிடித்திருப்பீர்கள்.

அதாவது, எதிர்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்களை முன்கூட்டியே கவனித்து, அப்போதைய தேவைகளுக்காக இப்போது மின்சாரத்தை வாங்கி, விற்பது தான் எலக்ட்ரிசிட்டி ஃபியூச்சர்ஸ்.

எலக்ட்ரிசிட்டி ஃபியூச்சர்ஸ் | Electricity Futures
எலக்ட்ரிசிட்டி ஃபியூச்சர்ஸ் | Electricity Futures

உதாரணம்

உதாரணத்திற்கு, ‘ஏ’ என்கிற மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் வெயில் வாட்டி எடுக்கப்போகிறது என்றும், ‘பி’ என்கிற மாநிலத்தில் அந்த மாதம் மழை வெளுத்துக்கட்ட போகிறது என்றும் கணிக்கப்படுகிறது.

அப்போது, ‘ஏ’ மாநிலத்திற்கு மின்சாரம் அதிகம் தேவைப்படும். ‘பி’ மாநிலத்திற்கு மின்சாரம் அவ்வளவாக தேவைப்படாது.

அதனால், ‘ஏ’ மாநிலம் ‘பி’ மாநிலத்திடம் இருந்து இப்போதே மின்சாரம் வாங்கி வைக்கும்.

இப்போது ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.6 என்றால், ஃபியூச்சர்ஸில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை கிட்டத்தட்ட ரூ.6.20 ஆக விற்பனை ஆகும்.

ஆக, தேவையான அளவு மின்சாரத்தை ‘ஏ’, ‘பி’யிடம் காசு கொடுத்து இப்போதே வாங்கி வைத்துகொள்ளும்.

இதன் மூலம், ‘பி’ ஓரளவு வருமானம் சம்பாதிக்கும்.

‘ஏ’ இப்போது விட்டுவிட்டால், ஆகஸ்ட் மாதத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.8-க்கு கூட விற்பனை ஆகலாம். அதனால், இப்போதே வாங்கும்போது, அதற்கும் லாபம் தான்.

யார் யார் வர்த்தகம் செய்ய முடியும்?

எலக்ட்ரிசிட்டி ஃபியூச்சர்ஸை வணிகத்தில் அனைவராலும் ஈடுபட முடியாது. மின்சாரம் உற்பத்தியாளர்கள் மற்றும் மின்சாரம் நுகர்வோர் மட்டுமே இதில் வணிகம் செய்ய முடியும்”.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *