
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சாமளாபுரம் பகுதியில் 13 வயது மாணவர் வசித்து வருகிறார். அவர் அன்னூர் அருகே அரசு விடுதியில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு விடுதியிலிருந்து வெளியே வந்த மாணவர் அவ்வழியே பைக்கில் வந்த நபர் ஒருவரிடம் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார்.
பைக்கில் வந்த நபர் மாணவனை அருகில் ஆள் நடமாட்டமற்ற பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அந்த நபர் மாணவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த மாணவன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த அந்த நபர் மரக்கட்டையால் மாணவனின் தலையில் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த மாணவர் மயங்கியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் இருந்த மாணவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து சூலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காவல்துறை விசாரணையில் அந்த இளைஞர் திருப்பூர் மாவட்டம் கோடாங்கி பாளையம் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (வயது 23) என்பது தெரியவந்தது. காவல்துறை விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. வசந்தகுமார் அந்த மாணவனை மதுபானக்கடைக்கு அழைத்து சென்று மது அருந்த வைத்துள்ளார்.

பிறகு அவரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று தான்பாலின உறவில் ஈடுபட முயற்சித்துள்ளார். சூலூர் காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.