
மதுரை: கொள்ளிடம் ஆற்று தண்ணீரை தொழிலக பயன்பாட்டுக்கு வழங்கக் கூடாது என அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி லால்குடியை சேர்ந்த சண்முகம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கொள்ளிடம் ஆற்றின் கிளை ஆறு அன்பில் கிராமம் வழியே செல்கிறது. இந்த ஆற்று நீரே குடிநீராகவும், விவசாய தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக இந்த ஆறு உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து கடந்த 25 ஆண்டுகளாக குழாய்கள் வழியாக குடிதண்ணீர் வழங்கப்பட்ட நிலையில் சட்டவிரோத மணல் குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் ஆழத்திற்கு சென்று நீர் பற்றாக்குறைக்கு ஏற்பட்டதால் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.