
மகாராஷ்டிரா பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்படும் என்று மாநில அரசு அறிவித்தது. இதற்கு எதிராக ராஜ் தாக்கரே குரல் கொடுத்தபோது, இவ்விவகாரத்தில் உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து மராத்திக்காக போராட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். இது இருவருக்கும் இடையே இருந்த 20 ஆண்டு இடைவெளியை குறைக்க உதவுவதாக அமைந்தது.
ராஜ் தாக்கரேயின் முடிவுக்கு உத்தவ் தாக்கரேயும் ஆதரவு தெரிவித்து இருந்தார். எனவே இருவரும் சேர்ந்து இந்தி திணிப்புக்கு எதிராக கூட்டு பேரணி நடத்தப்போவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்தி திணிப்பை மாநில அரசு திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்தது. இதையடுத்து போராட்ட பேரணியை வெற்றி பொதுக்கூட்டமாக தாக்கரே சகோதரர்கள் அறிவித்தனர். ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் சேர்ந்து மும்பை ஒர்லியில் நடந்த வெற்றி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனால் இரு கட்சிகளும் மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால் ராஜ் தாக்கரேயை வெறுப்பேற்றும் வகையில் உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.சஞ்சய் ராவத் தங்களது கட்சி பத்திரிகையில் தலையங்கம் எழுதினார். அதில் சிவசேனா உடைந்த போது ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசியது குறித்து ராஜ் தாக்கரே விளக்கமளிக்கவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ராஜ் தாக்கரே தனது கட்சி நிர்வாகிகளின் மூன்று நாள் கூட்டத்தை நாசிக் அருகில் உள்ள இகத்புரியில் கூட்டி இருந்தார். அடுத்து வர இருக்கும் மாநகராட்சி தேர்தல் குறித்து மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த கட்சி நிர்வாகிகளுடன் ராஜ் தாக்கரே ஆலோசித்து வருகிறார்.
அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்த ராஜ் தாக்கரே கூட்டணி குறித்து பேசினார். அதில், ”தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கிறது. அந்த நேரத்தில் இருக்கும் சூழ்நிலைக்கு தக்கபடி கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். அரசியல் ரீதியாக உத்தவ் தாக்கரேயுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக அவசரப்பட்டு முடிவு எடுக்க முடியாது. இரு தரப்பினரும் பல விசயங்கள் குறித்து புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. மொழிப் பிரச்னைக்காக மட்டுமே வெற்றிப்பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்திற்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மராத்தி மீடிய பள்ளிகளை மும்பையில் உள்ள செமி ஆங்கில மீடிய பள்ளிகளைப் போன்று மாற்றவேண்டும். இதன் மூலம் மராத்தி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதை கட்டுப்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.
அதிர்ச்சியில் உத்தவ் தாக்கரே..!
கூட்டணி குறித்து ராஜ் தாக்கரே தெரிவித்துள்ள கருத்து உத்தவ் தாக்கரேயிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஏற்கனவே உடைந்துவிட்டது. துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியிடம் சிவசேனாவும், அதன் சின்னமும் சென்றுவிட்டது. இதனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா படுதோல்வியை சந்தித்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து வெளியில் வரவேண்டுமானால் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உத்தவ் தாக்கரே இருக்கிறார்.
எனவேதான் ராஜ் தாக்கரேயுடன் கூட்டணி சேர்ந்தால் மீண்டும் மும்பை மாநகராட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று உத்தவ் தாக்கரே நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால் ராஜ் தாக்கரேயின் புதிய பேட்டி மூலம் அவர் கூட்டணிக்கு பல்வேறு நிபந்தனைகளை விதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு புறம் மாநகராட்சி தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கூட்டத்தை கூட்டவேண்டும் என்று உத்தவ் தாக்கரே விருப்பம் தெரிவித்துள்ளார்.

2005-ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து விலகிய ராஜ் தாக்கரே அதன் பிறகு தனது பெரியப்பா மகன் உத்தவ் தாக்கரேயுடனோ அல்லது அவரது சிவசேனா கட்சியுடனோ எந்த வித தொடர்பும் வைத்துக்கொண்டதில்லை. ராஜ் தாக்கரே சொந்தமாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.
கட்சி ஆரம்பித்த புதிதில் இளைஞர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருந்தது. ஆனால் படிப்படியாக அச்செல்வாக்கு குறைய ஆரம்பித்தது. கடைசியாக நடந்த சட்டமன்ற தேர்தலில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா படுதோல்வியை சந்தித்தது. இத்தேர்தலில் போட்டியிட்ட ராஜ் தாக்கரே மகன் கூடதோல்வியை தழுவினார். இத்தோல்வி ராஜ் தாக்கரேயை வெகுவாக பாதித்துள்ளது. எனவேதான் உத்தவ் தாக்கரேயுடன் கூட்டணி வைப்பது குறித்து ராஜ் தாக்கரே பரிசீலித்து வருகிறார்.