
தேசிய மருத்துவர் தினத்தையொட்டி சென்னை ராஜ் பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் நடந்த விழாவில், மருத்துவர்களுக்கு வழங்கிய சான்றிதழில், இல்லாத ஒன்றை குறள் என அச்சிட்டு வழங்கியது புது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. திருக்குறள் ஆர்வலர்கள் இது தொடர்பாக தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தேசிய மருத்துவ தினத்தையொட்டி கவர்னர் – மருத்துவர்களுடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது ராஜ் பவன். விழாவில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு மருத்துவத்துறையில் சிறந்து விளங்குவதாகப் பாராட்டிப் பேசினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் மருத்துவர்கள் சிலருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்தச் சான்றிதழில், 944வது திருக்குறள் என
‘செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு
மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு’
என்ற இரண்டு வரிகள் அச்சிடப்பட்டு அதற்குக் கீழே திருவள்ளுவர் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இதுதான் தர்போதைய சர்ச்சைக்குக் காரணம். ஏனெனி ல் 1330 குறள்களில் இப்படியொரு குறள் இல்லவே இல்லை என்கிறார்கள், திருக்குறள் மீது பற்றும் ஆர்வமும் கொண்ட தமிழறிஞர்கள்.
இது தொடர்பாக தமிழாசிரியராக இருந்து ஓய்வு பெற்ற வெற்றிவேலிடம் பேசினோம்.
”1330 குறளையும் எந்த நேரத்துல கேட்டாலும் சொல்வேன் நான். எனக்குத் தெரிஞ்சா போதாதுன்னு என்னிடம் படித்த மாணவர்களிடமும் சும்மா மனப்பாடத்துக்கு பத்து குறள் படிச்சிட்டுப் போயிடக் கூடானுது கறாராச் சொல்லி வந்தேன். ஏன்னா ஒவ்வொரு குறளுமே நம்ம வாழ்க்கைக்கு அவசியமானது.
ரெண்டு வரிக் குறளுக்கு ஒரு வரியில உரை கூடநான் எழுதியிருக்கேன்.

அதனால திருக்குறள் பத்தி யாராச்சும் தப்பாப் பேசினாலே எனக்கு கோபம் வந்திடும்.
கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் குறளே இல்லாத ஒண்ணை திருக்குறள்னு அச்சிடிருப்பது வேதனையா இருக்கு. எவ்வளவு பெரிய நிகழ்ச்சி. கவனமா இருக்க வேண்டாமா? எவ்வளவு அஜாக்கிரதையா இருந்திருக்காங்க. ரொம்பவே கொதிச்சுப் போயிட்டேன்.
திருக்குறளுக்கும் வள்ளுவருக்கும் நடந்த அவமானம்ங்க இது. திருக்குறள் தெரியலைனா அந்த சர்டிபிகேட்ல அதைப் போடாமலே விட்டுடலாமே? அந்த சர்டிபிகேட்டை வாங்கிட்டுப் போன டாக்டர்கள் அதை எங்காச்சும் பெருமையாக் காட்ட முடியுமா? என்ன சொல்றதுன்னே தெரியலை’ எனக் கொதிப்புடன் பேசினார்.

அளுநர் மாளிகை தரப்பில் இது குறித்துக் கேட்க ராஜ் பவனின் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
”எங்க கவனத்துக்கும் இந்த பிரச்னை வந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்புல எப்படியோ தவறு நடந்திருக்கு. விசாரிச்சு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என முடித்துக் கொண்டார்.