
மதிமுக-வில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் அக்கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. பொதுச் செயலாளர் வைகோவும், முதன்மைச் செயலாளர் துரை வைகோவும் மல்லை சத்யா கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி வரும் சூழலில், மல்லை சத்யா அதுகுறித்து விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். இனி கேள்விகளும் பதில்களும்…
“32 வருட கால அரசியல் வாழ்வில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டு உள்ளது. நீங்கள் இதனை எதிர்பார்தீர்களா?”
“நான் கனவிலும் இதுபோன்ற நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. உலகமே தலைகீழாக புரண்டாலும் தலைவர் வைகோ என்னை கைவிட மாட்டார் என்று நம்பியிருந்தேன். என்னைப் பற்றி நன்கு அறிந்தவர் அவர். மதிமுகவில் உள்ள மற்றவர்களை காட்டிலும் என்னை அவர் நன்கு அறிந்தவர். என்னுடைய உழைப்பு என்னுடைய விசுவாசம் எல்லாமே அவருக்கு தெரியும். அதனால்தான் அவர் பல போராட்டங்கள் பல விஷயங்களை எனக்கு சொல்லி தான் ஒன்றாக செய்திருக்கிறோம். ஆனால் என்னுடைய நம்பகத்தன்மையை கேள்விக்கு உண்டாகிற வகையில் என் மீதான அப்பாண்டமான குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
கடைசி ஆயுதத்தை தான் என் மீது ஏவி இருக்கிறார்!
உயர்ந்த பட்ச அரசியல் ஆளுமையாக இருக்கின்ற வைகோ அவர்கள், என் மீது என்ன குற்றச்சாட்டு வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால் `பிரபாகரனுக்கு ஒரு மாத்தையா போன்று எனக்கு மல்லை சத்யா’ என்று சொல்லும் போது என்னால் அதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதிரி என்று சொல்லலாம், விரோதி என்று சொல்லலாம் ஆனால் துரோகி என்று சொல்வது மனிதனின் கடைசி ஆயுதம். கடைசி ஆயுதத்தை தான் என்னுடைய தலைவர் என் மீது ஏவி இருக்கிறார். அவர் எடுக்கின்ற முதல் அஸ்த்திரமே கடைசி ஆயுதமாக இருக்கிறது.”
“அவர் எடுக்கின்ற முதல் அஸ்த்திரமே கடைசி ஆயுதமாக இருக்கிறது என்று நீங்கள் சொல்கிறீர்கள். இதனை எப்படி பார்க்கிறீர்கள்?”
“இது அவருடைய அரசியல் ஆளுமை. ஏறக்குறைய 55 ஆண்டுகால அரசியல் பயணம் அவர் கொண்டுள்ளார். பல்வேறு அரசியல் ராஜதந்திரிகளை சந்தித்துள்ளார். உலகின் பல்வேறு தலைசிறந்த ஆளுமைகளை சந்தித்த அனுபவத்தைக் கொண்டுள்ளார். உலக வரலாற்றை கரைத்துக் குடித்தவர் அவர். அவருக்கு நன்றாகவே தெரியும் எந்த ஆயுதத்தை வீழ்த்தினால் இவனை வீழ்த்த முடியும் என்று. அதில் என்னுடைய தலைவர் வெற்றி பெற்று இருக்கிறார், நான் தோல்வி அடைந்திருக்கிறேன் என்பதை வெளிப்படையாக சொல்லிக் கொள்கிறேன்.”
“இதை சொன்னால் நீங்கள் காயப்படுவீர்கள் என்று நினைத்து சொல்கிறாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா?”
“சமீபத்தில் லண்டன் சென்று அங்குள்ள ஈழத்தமிழர்களை சந்தித்து வந்தேன். முன்னாள் போராளிகள் எல்லோரையும் சந்தித்தேன். ஒருவேளை அவர் அதனை ரசிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். உலகம் முழுவதும் தமிழ் சங்கப் பணிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கும்பொழுது இது போன்ற ஆளுமைகளை நான் சந்திப்பது ஒரு எச்சரிக்கை கொடுப்பதற்காக இவ்வாறு செய்திருப்பார் என நினைக்கிறேன். இதனை ஒரு உளவியல் ரீதியாக தாக்குதலாக தான் நான் பார்க்கிறேன்.”

“வைகோ ரசிக்கவில்லையா… துரை வைகோ ரசிக்கவில்லையா?”
“நான் ஒரு சாதாரண எளிய குடும்பத்தை சேர்ந்தவன். நான் 1984 ஆம் ஆண்டில் என்னுடைய உணவகத்தில் போராளிகளை எல்லாம் வைத்திருந்தேன். அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சமீபத்தில் இது போன்ற நிகழ்வு நடக்கும் பொழுது, அது ஒரு சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.
துரை வைகோவிற்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் என்னுடைய தலைவரின் பிள்ளை என்ற பெருமை எனக்கு இருக்கிறது. என்னுடைய பிள்ளைகள் எல்லாம் வைகோ அவர்கள் பாசமாக பேசுகிறார் அல்லவா அதுபோல எனக்கும் அந்த பாசம் அவருடைய மகன் மேல் உள்ளது. தலைவரின் பிள்ளையை தலையில் வைத்து கொண்டாடுகிறோம். எனவே தான் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஒரு பத்திரிகையில் செய்தி வந்த பொழுது, அந்தத் தீர்மானத்தை வழிமொழிகிறேன் என்று பேசி, அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று நான் பேசியவன்.
அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்ற வாக்கெடுப்பில் அதற்காக நான் ஓட்டு போட்டவன். ஆனால் தவறான பிரசாரங்கள் தவறான கருத்தியலை புகுத்தி புகுத்தி அவரை இப்படி மாற்றி இருக்கிறார்கள். ”
“இப்போது அதற்கு யார் தான் காரணம்? துரை வைகோவும் இல்லை என்றால் இதற்குப் பின்னால் வேறு யாராவது இருக்கிறார்களா?”
“முன்பெல்லாம் தலைவரிடம் மிக எளிமையாக பேசி விடுவோம். இப்போது அவரிடம் அவ்வளவு எளிமையாக பேசிவிட முடியாது. தொலைபேசியில் அவரை எளிமையாக ரீச் செய்ய முடியாது. கடந்த ஒன்பதாம் தேதி துரோகி என எனக்கு பட்டம் கொடுத்த பிறகு தலைவரிடம் பேசுவதற்காக அவருக்கு கால் செய்தேன், அழைப்பு எடுக்கவில்லை. தலைவரிடம் பேச முடியாத ஒரு சூழல், துரை யாரை சொல்கிறாரோ அவரிடம் தான் அவர் பேச வேண்டும் என்ற சூழலுக்கு அவர் தள்ளப்படுகிறார். இப்படி இருக்கும் பொழுது நான் யாரிடம் சென்று நிற்க முடியும்.
தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறார்கள். எங்கள் கட்சியில் உள்ள ஒரு தம்பி அவருடைய முகநூல் பதிவில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் வைகோ, மல்லை சத்யா ஆகிய படங்களை இணைத்து பதிவு ஒன்றை போடுகிறார். இது ரொம்ப நாள் முன்னாடி நடந்தது. ஆனால் சமீபத்தில் எங்கள் கட்சியில் உள்ள ஒரு வழக்கறிஞர் பெரியார், அண்ணா, தலைவர் வைகோ, துரை இந்த படங்களை இணைத்து இதனை ஏற்றுக் கொண்டால் இருங்கள். இல்லை என்றால் வெளியேறுங்கள் என்றார்.

நீங்கள் 30 ஆண்டுகால விசுவாசிகள் மட்டுமல்ல. நீங்கள் 300 ஆண்டுகள் ஆனாலும் எங்களுக்கு அடிமைப்பட்டவர்கள் தான் என்று ரொம்ப நாளுக்கு முன் பதிவிட்ட என்னுடைய படத்தை இணைத்து பதிவு வெளியிட்டு இருந்தார். அதில் என்னுடைய படத்தை போடாமல் இருந்தால் கூட நான் கடந்து போய் இருப்பேன். இதற்கு பெயர் ஆண்டான் அடிமை தனம். இது ஆதிக்க வர்க்க கண்ணோட்டம். என்னுடைய தரப்பில் நான் கேள்வி கேட்டேன். ஆனால் அவரை கண்டிக்கவும் இல்லை.
தலைவர் ஏதோ பேசி விட்டார் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, நேற்றைய முன்தினம் துரை வைகோ ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கிறார். அதில் நான் மக்கள் விரோத போக்கில் ஈடுபடுபவன் என்றும், அவர் ஒரு பெரிய சமூக விரோதி என்ற நிலமைக்கு என்னை சித்தரித்து பேசுகிறார்.
என்னுடைய மனைவி கவுன்சிலராக இருக்கிறார். ஒட்டுமொத்த மகளிர் அணியும் அவருக்கு சீட்டு கொடுக்க கூடாது என்று சொன்னார்கள் இருந்தும் நான் சீட்டு கொடுத்தேன் என்று பேசி உள்ளார். இவர்கிட்ட நாங்க சீட்டு கேட்டு நிற்கவில்லை. திமுக கூட்டணியில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி மற்ற இடத்தில் வாங்குவதுபோல அந்த இடத்தில் ஒரு மூன்று சீட்டு எங்கள் கட்சிக்கு வாங்கினோம். அந்த மூன்று சீட்டு ஒரு மகளிர் சீட் இருந்தது. அந்த இடத்தில் யாரும் இருக்கவில்லை அதனால் என்னுடைய மனைவியை நிற்க வைத்தேன். அப்படி ஒரு பெண் அதிகாரத்திற்கு வருவதை உங்களால் ஜீரணக்க முடியவில்லை. எனவே நாங்கள் உங்களுக்கு சீட்டு தர வேண்டுமா என்றெல்லாம் துரை வைகோ பேசியுள்ளார்.
ஒரு பொது புத்தி கூட இல்லை
கட்சியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சீட்டு வாங்கியது நான்தான். அது கட்சி தலைவரிடம் நான் பேசி முடிவு எடுத்தது. என்னை நீங்கள் என்னவென்றாலும் பேசலாம் ஆனால் என்னுடைய மனைவி பற்றி பேச கூடாது. இது தவறான புரிதல். இதையெல்லாம் பார்க்கும் பொழுது அவர் இன்னும் பண்பட்டு வரவில்லை என்று தோன்றுகிறது. துரை வைகோவிற்கு ஒரு பொதுவான ஒரு பொது புத்தி கூட இல்லை என்பதுதான் இது காட்டுகிறது. ”
“தலைவர் அந்தஸ்தில் துரை வைகோவையும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? உங்கள் கருத்து என்ன? ”
“அவருடைய எதிர்பார்ப்பு அவ்வாறு கூட இருக்கலாம். எனக்கு நேரடி தொடர்பு எல்லாமே தலைவர் வைகோ தான். எனக்கு தலைவர் அவர் தான். அவருக்காக தான் மறுமலர்ச்சி திமுகவில் இருக்கிறோம். அவருக்காக தான் இந்த இயக்கமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
பாமகவில் உள்ள ராமதாஸ் அவர்களை சாதாரணமாக கடந்து போய்விட முடியாது. கட்சியா குடும்பமா என்று சொல்லும் பொழுது கட்சி தான் முக்கியம், மகன் அன்புமணியை வெளியே போ என்கிறார். அந்த வகையில் அந்த தலைவர் தற்பொழுது உயர்ந்து நிற்கிறார்.

என்னுடைய தொடர்பு எல்லாமே தலைவர் வைகோவுடன் தான். நான் துரை வைகோ அவர்களிடம் பேசினது கிடையாது. துரை வைகோ வரும்பொழுது, வணக்கம் வைக்கலாம் என்று நின்று கொண்டிருப்பேன். அவர் நான் நிற்கும் திசைக்கு எதிர் திசையில் காரில் இருந்து இறங்கி சென்றுவிடுவார். என்னுடைய தலைவருடைய பிள்ளைக்கு வணக்கம் வைக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் என்னை கண்டு கொள்ளாமல் அவருக்கு வேண்டப்பட்டவர்களை மட்டும் சந்தித்து விட்டு சென்று விடுவார். என்னை தவிர்க்கும் பொழுது நான் ஏன் தாமாக வந்து பேச வேண்டும். சுயமரியாதை இயக்கமல்லவா.”
“என்ன பிரச்னை உங்களுக்கும், துரை வைகோவுக்கும்?”
“அவர் அரசியலுக்கு வந்ததிலிருந்து நானும் அவரும் மனமுவந்து பேசிக் கொண்டதில்லை. அவருடைய பாதை தனி பாதையாக தான் இருக்கிறது. அவரை சார்ந்து கொஞ்சம் பேர் இருந்து கொண்டே இருந்தார்கள். நான் தலைவரை சார்ந்து தான் இருக்கிறேன். இந்த விஷயத்திலும் கூட தலைவர் என்னை தனியாக கூப்பிட்டு கூட பேசியிருக்கலாம். நிர்வாக குழுவில் பேசுவதற்கு கூட என்னை கூப்பிட்டு பேசி இருக்கலாம். பொதுவெளியில் அவர் இது குறித்து பேசி விட்டார். நிர்வாக கூட்டத்திலும் கூட நிர்வாகிகளை செட் செய்து வைகோ முன் பேச வைக்கிறார்கள்.
அந்தக் கூட்டம் முடிந்து மறுநாள் என்னிடம் நிர்பந்தத்தினால் தான் இவ்வாறு பேசினோம் என்று கூறினார்கள். உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் என்னவெல்லாம் வைகோவை பற்றியும் துரை வைகோவை பற்றியும் பேசி உள்ளீர்கள். அதனை இப்போது நான் ஓபன் செய்தால் பெரிய விவகாரமாக மாறி விடும்.
இப்பவும் தலைவர் வைகோ விற்கும், சகோதரர் துரைக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால் நிர்வாகிகள் நடிக்கிறார்கள். தலைவரைப் பற்றி அசிங்க அசிங்கமாக பேசியவர்கள் இருக்கிறார்கள். அதேபோல் எங்கள் கட்சி உள்ளேயே திமுக-விற்கு செல்லலாம் என்று கூறி அவர்களும் இருக்கிறார்கள். திமுக-விற்கு போய்விட்டு இப்போது உள்ள வந்தது உள்ளவர்கள் எல்லாம் பொறுப்பில் உள்ளார்கள். இதுவரை இயங்காதவர்கள் இப்போது திடீரென்று இயங்க வருகிறார்கள். ஆனால் செத்தாலும் அவர்கள் பேசியது போன்ற அசிங்கமான வார்த்தைகள் என்னிடம் இருந்து வராது. ”