
இந்து கடவுள்களுக்கு எதிராக எக்ஸ் தளத்தில் ஆட்சேபனைக்குரிய வகையில் பதிவிட்டதற்காக பல்வேறு மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரின் பேரில் வஜாஹத் கான் என்பவர் கடந்த ஜூன் 9-ம் தேதி கொல்கத்தா போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
பின்னர், தன்னுடைய பழைய ட்வீட்களுக்காக அஸ்ஸாம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் தனக்கெதிராக எஃப்.ஐ.ஆர்-கள் மற்றும் புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக இந்தக் கைதினை எதிர்த்து வஜாஹத் கான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, ஜூன் 23 முதல் ஜூலை 14 வரை கட்டாய நடவடிக்கையிலிருந்து வஜாஹத் கானுக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்கியது.
இந்த நிலையில், அதே உச்ச நீதிமன்ற அமர்வில் இந்த மனு நேற்று (ஜூலை 14) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வஜாஹத் கான் தரப்பு வழக்கறிஞர், `சமூக வலைத்தளத்தில் வகுப்புவாத கருத்துகளைத் தெரிவித்த ஷர்மிஸ்தா பனோலி என்பவர் மீது அளித்த புகாருக்கு பழிவாங்கும் வகையில் வஜாஹத் கான் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது’ என்றும், `தன்னுடைய பழைய ட்வீட்களையெல்லாம் நீக்கிவிட்டு அவர் மன்னிப்பு கேட்டதாகவும்’ தெரிவித்தார்.
மேலும், ஷர்மிஸ்தா பனோலி என்பர் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டதாக வாதத்தை முன்வைத்த வழக்கறிஞர், வஜாஹத் கான் மீது முதல் எஃப்.ஐ.ஆர் ஜூன் 2-ம் தேதி பதிவுசெய்யப்பட்டகாகக் குறிப்பிட்டார்.
அதைத்தொடர்ந்து பேசிய நீதிபதி பி.வி. நாகரத்னா, “பேச்சு மற்றும் கருத்து சுதந்திரதம் ஆகிய அடிப்படை உரிமைகளின் மதிப்பை குடிமக்கள் அறிந்திருக்க வேண்டும். அதில் மீறல்கள் ஏற்படும்போது அரசு நடவடிக்கை எடுக்கலாம். சமூக வலைத்தளங்களில் பிளவுவாத போக்கை கட்டுப்படுத்த வேண்டும்.

குடிமக்களிடையே சகோதரத்துவம் இருக்க வேண்டும். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19 (2)-ல் சரியாக வைக்கப்பட்டிருக்கின்றன.” என்று தெரிவித்தார்.
இறுதியில் நீதிபதிகள், வஜாஹத் கானுக்கு வழங்கப்பட்ட இடைக்கால பாதுகாப்பை அடுத்த விசாரணை வரை நீட்டித்து, அவருக்கு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தைக் கையாள்வதில் உதவுமாறு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.

Article 19 (a) and 19 (2)
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19 (a) ஆனது, இந்திய குடிமக்கள் அனைவருக்கும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை அடிப்படை உரிமைகளாக வழங்குகிறது.
அதேசமயம் பிரிவு 19 (2) ஆனது, இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு எதிராகவோ, நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலோ, அண்டை நாடுகளுடனான நட்புறவை பாதிக்கும் வகையிலோ, சமூகத்தின் அமைதியைக் காக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட பொது உத்தரவை மீறும் வகையிலோ, நீதிமன்ற உத்தரவை மீறும் வகையிலோ பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது என்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறது.