
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகிலுள்ள நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவர், அப்பகுதியில் டூவீலர் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். அத்துடன் பா.ஜ.கவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவிலும் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். தனது வீட்டை புதுப்பித்து கட்டி வருவது தொடர்பாக இவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாலமுருகன் என்ற தி.மு.க நிர்வாகி பாலமுருகனுக்கும் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், ராஜதுரை தன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது பாலமுருகன் மற்றும் அவரது தந்தை பால்ராஜ் உட்பட அப்பகுதியைச் சேர்ந்த 6 பேர் அரிவாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், ராஜதுரை மற்றும் தடுக்க முயன்ற அவரது மனைவி ஜெயந்தி, உறவினர்கள் கோகுல்ராஜா, நவீன் ஆகியோர் தாக்கப்பட்டனர்.
இதுகுறித்து சாயர்புரம் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த ராஜதுரை மற்றும் அவரது உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெர்று வருகின்றனர்.
அண்ணாமலை அண்ணா..!
இந்த நிலையில், ரத்தக் காயங்களுடன் ராஜதுரை வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “தி.மு.கவினர் என்னை அரிவாளால் வெட்டி விட்டனர். அண்ணாமலை அண்ணா.. என் உயிரை காப்பாற்றுங்கள். போலீஸாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிகிச்சை பெற்று வரும் ராஜதுரையிடம் பேசினோம், “என் பக்கத்து வீட்டுக்காரரான தி.மு,க நிர்வாகி பாலமுருகன் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்தார். இதனால், குடியிருப்பு பகுதிக்குள் கஞ்சா விற்பனை அதிகரித்தது. கஞ்சா புகைப்பவர்கள் குடியிருப்பு பகுதிகளில் அமர்ந்து புகைக்கின்றனர். இதனை முன்னாள் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் சாரிடம் புகார் மனுவாக அளித்தேன். கஞ்சா விற்பனைக்கு நான் தடையாக இருப்பதாக எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். அப்போதிலிருந்தே எனக்கும் அவருக்கும் மோதல் ஏற்பட்டது.

அதனை மனதில் வைத்துக் கொண்டு தற்போது நான் என் வீட்டை புதுப்பித்து வரும் நிலையில் சுவர் சம்மந்தமாக பேசி வேண்டுமென்று வம்பிற்கு இழுத்து என்னை அரிவாளால் வெட்டியுள்ளார். என்னை மட்டுமல்லாமல் என் மனைவி மற்றும் உறவினர்களையும் தாக்கியுள்ளார். என் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேறு வழி தெரியவில்லை. அதனால் அண்ணாமலை அண்ணனிடம் என்னை காப்பாற்றும்படி வீடியோ வெளியிட்டுள்ளேன். வீடியோவைப் பார்த்துவிட்டு அண்ணாமலை அண்ணா எனக்கு போன் செய்து ஆறுதல் கூறியதுடன் சம்மந்தப்பட்ட தி.மு.க நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்துவதாகக் கூறியுள்ளார்.” என்றார்.