
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கடைசி நாளான இன்று வெற்றிக்கு மிக நெருக்கமாக வந்து போட்டியை இழந்திருக்கிறது இந்திய அணி.
22 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில்லான வெற்றியைப் பெற்றிருக்கிறது இங்கிலாந்து. இதன்மூலம் 1 -2 என்ற கணக்கில் முன்னணியில் இருக்கிறது இங்கிலாந்து. இது மீதமிருக்கும் இரண்டு போட்டிகள் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், நீண்ட நேரம் நிலைத்திருந்து போராடிய மூத்த வீரர் ஜடேஜாவைப் பாராட்டிப் பேசினார்.
“டெஸ்ட் போட்டியை இவ்வளவு நெருக்கமாக எடுத்துச் சென்றதால் பெருமையாக உணர்கிறேன். இன்று காலை நம்பிக்கையுடன் களமிறங்கினோம். நிறைய பேட்டிங் மீதம் இருந்தது, எங்களுக்கு டாப் ஆர்டரில் இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப் அமைய வேண்டும் என எண்ணினோம். ஆனால் அதைச் செய்யமுடியவில்லை.
அவர்கள் எங்களைவிட நன்றாக விளையாடினர், ஆனால் எப்போதுமே நம்பிக்கை விட்டுப்போகவில்லை.

பெரிய டார்கெட் இல்லை, ஒரு பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தாலே விளையாட்டுக்குள் வந்திருக்க முடியும். ஜட்டு அனுபவமிக்கவர், சொல்வதற்கொன்றுமில்லை, இறுதி பேட்ஸ்மேன்களுடன் அவர் தொடர்ந்து விளையாட வேண்டுமென விரும்பினேன்.” என்றார் கில்.
அடுத்த போட்டியில் பும்ரா விளையாடுவாரா?
ரிஷப் பண்ட் ரன் அவுட் பற்றி பேசியபோது, “முதல் இன்னிங்ஸில் லீட் வைக்க வேண்டியது எங்களுக்கு முக்கியமனதாக இருந்தது” என்றார்.
நான்காவது இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட் இழந்தது குறித்து, “நிலைமை படபடவென மாறின. கடைசி ஒருமணி நேரத்தில் இன்னும் நன்றாக முயற்சித்திருந்திருக்கலாம். இன்று காலை அவர்கள் சரியான திட்டங்களுடன் வந்திருக்கின்றனர். இந்த ஸ்கோர் எங்கள் விளையாட்டை பிரதிபலிப்பதாக இல்லை” என்றார்.
ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடக்கும் அடுத்த போட்டியில் பும்ரா பங்கேற்பாரா என்ற கேள்விக்கு, “சீக்கிரமே உங்களுக்குத் தெரியவரும்” என பதிலளித்தார்.