
திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் காரியாங்குடி, நெம்மேலி, இளங்கச்சேரி பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் சமைப்பதற்காக, சமையலர்கள் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது சமையலறையில் இருந்த பொருட்கள் உடைத்து நொறுக்கப்பட்டிருந்தன. மளிகை பொருட்கள் சிதறி கிடந்தன.
மேலும் பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்காக உள்ள பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியின் மேல் பகுதி உடைக்கப்பட்டு இருந்தது. சமையலர் தொட்டியை எட்டி பார்க்க குடிநீரில் மலம் கலக்கப்பட்டிருந்து. இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தன. தென்னை மரங்களில் தேங்காய்கள் பறிக்கப்பட்டிருந்தன.
இது குறித்து சமையலர்கள் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் வெளியே கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராமத்தினர் பள்ளி முன் திரண்டனர். பள்ளிக்கு அதிகாரிகள் மற்றும் போலீஸார் வந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக மூன்று பேரை பிடித்து விசாரித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து சிலரிடம் பேசினோம், “பள்ளிக்குள் வந்த மர்ம நபர்கள் பள்ளிக்குள்ளேயே சிக்கன் சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் தான் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து விட்டு சென்றுள்ளனர். குழந்தைகள் குடிக்கும் தண்ணியில் இப்படி செய்கிறோமே என்ற எண்ணம் கூட இல்லாமல் இதை செய்துள்ளனர். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு யாரும் வர மாட்டார்கள் என்பதால் மர்ம நபர்கள் துணிச்சலுடன் வந்து இதை செய்திருக்கிறார்கள் என கருதுகிறோம்.
மது போதையில் இதனை செய்தார்களா என்பது தெரியவில்லை. நல்ல வேளையாக முன்கூட்டியே மலம் கலக்கப்பட்டதை பார்த்ததால் குடிநீரை மாணவர்கள் யாரும் குடிக்கவில்லை. இதனால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
ஏற்கனவே வேங்கைவயலில் மலம் கலக்கப்பட்ட விவகாரமே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் அரசு பள்ளியில் மலம் கலந்திருக்கும் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் சொந்த மாவட்டத்தில் இந்த செயல் நடந்திருப்பது பெரும் பேசு பொருளாகவும் மாறியிருக்கிறது.

இது குறித்து திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பள்ளியில் அனைத்து சாதியை சேர்ந்த மாணவர்களும் படிக்கின்றனர். சாதி பிரச்னையை தூண்டுவதற்காக இதை செய்தார்களா அல்லது வேறு எதுவும் காரணம் இருக்குமா என தெரியவில்லை என்றனர். போலீஸ் தரப்பிலோ, இதில் சாதிய பிரச்சனை ஏதுமில்லை, குடி போதை ஆசாமிகள் இதனை செய்துள்ளார்கள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது” என்கிறார்கள்.