• July 14, 2025
  • NewsEditor
  • 0

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்து vs இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று சமனில் இருந்தன.

மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10-ம் தேதி தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட்டின் சதத்தால் 387 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஜஸ்பிரித் பும்ரா

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ராகுலின் சதம் மற்றும் பண்ட், ஜடேஜா ஆகியோரின் அரைசதங்களால் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளும், நான்காண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்குத் திரும்பிய ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய பவுலர்களின் பந்துவீச்சில் முற்றிலுமாகத் தடுமாறி 192 ரன்களில் ஆல் அவுட்டானது.

வாஷிங்டன் சுந்தர் அற்புதமாகப் பந்துவீசி ரூட், ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித் ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகள் என மொத்தமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து 193 ரன்கள் அடித்தால் வெற்றி எனக் களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஜெய்ஸ்வாலை 0 ரன்னில் ஆர்ச்சர் வெளியேற்ற, கருண் நாயர் மற்றும் கேப்டன் கில்லை தனது அடுத்தடுத்த ஓவர்களில் பெவிலியனுக்கு அனுப்பினார் ப்ரைடன் கார்ஸ்.

ஆட்ட நேரம் முடிவடைய சில நிமிடங்களே இருப்பதால் பேட்ஸ்மேனை இறக்கி எதிர்பாராதவிதமாக விக்கெட்டை இழக்க வேண்டாமென ஆகாஷ் தீப் களமிறக்கப்பட்டார்.

வாஷிங்டன் சுந்தர் - இந்தியா
வாஷிங்டன் சுந்தர் – இந்தியா

ராகுலுடன் கைகோர்த்து இரண்டு ஓவர் தாக்குப்பிடித்த ஆகாஷ் தீப்பை ஸ்டோக்ஸ் விக்கெட் எடுக்க நான்காம் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

33 ரன்களுடன் ராகுல் நாட் அவுட் பேட்ஸ்மேனாக நிற்க இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் குவித்தது.

இந்த நிலையில், 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கில் ராகுலும், பண்ட்டும் களமிறங்கினர். அதேசமயம், மீதமிருக்கும் 6 விக்கெட்டுகள் விரைவாக வீழ்த்தினால் நமக்கு வெற்றி என இங்கிலாந்தும் களமிறங்கியது.

அதற்கேற்றார்போலவே, பண்ட்டை 9 ரன்களில் கிளீன் போல்டாக்கி இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தினார் ஆர்ச்சர்.

அதையடுத்து, ராகுலுடன் ஜடேஜா கைகோர்த்தார். ஆனால், அடுத்த மூன்றாவது ஓவரிலேயே ராகுலை 39 ரன்களில் எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டாக்கினார் ஸ்டோக்ஸ்.

பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தரும் அடுத்த ஓவரிலேயே பந்துவீசிய ஆர்ச்சரிடமே கேட்ச் கொடுத்து 0 ரன்னில் வெளியேறினார்.

இந்த இக்கட்டான நேரத்தில் ஜோடி சேர்ந்த ஜடேஜா – நிதிஷ்குமார் ரெட்டி கூட்டணி 15 ஓவர்கள் தாக்குப்பிடித்து 30 ரன்கள் சேர்த்த நேரத்தில், நிதிஷ்குமார் ரெட்டியை 13 ரன்களில் அவுட்டாக்கி பார்ட்னர்ஷிப்பை உடைத்தார் கிறிஸ் வோக்ஸ்.

அந்த விக்கெட்டைத் தொடந்து இரு அணிகளும் உணவு இடைவேளைக்குச் சென்றன.

உணவு இடைவேளை முடிந்த பின்னர், 17 ரன்களில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக நின்றுகொண்டிருந்த ஜடேஜாவுடன் களமிறங்கினார் பும்ரா.

பும்ரா
பும்ரா

ஒரு கட்டத்தில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் நடுவரால் எல்.பி.டபிள்யு அவுட்டுக்குள்ளான ஜடேஜா, ரிவ்யூ எடுத்து அதிலிருந்து தப்பினார்.

மேலும், அடுத்த பந்திலேயே சிக்ஸும் அடித்தார். ஜடேஜா – பும்ரா கூட்டணி நிதானமாக 20 ஓவர்களைக் கடந்து ஆடிக்கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் ஸ்டோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தை பும்ரா தூக்கியடிக்க முயல அது டாப் எட்ஜ் ஆகி டிம் கைகளில் தஞ்சமடைந்தது. 54 பந்துகளில் 5 ரன்களுடன் பெவிலியன் சென்றார் பும்ரா.

கடைசி ஆளாக சிராஜ் களத்துக்கு வர, இந்தியாவின் வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டது. அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் 131 பந்துகளில் 42 ரன்களுடன் அரைசதம் நெருங்கிக் கொண்டிருந்த ஜடேஜா மீது இருந்தது.

அந்த நம்பிக்கையை நீட்டிக்கும் வகையில் 150 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார் ஜடேஜா. சிராஜும் விக்கெட்டைப் பறிகொடுக்காமல் அடிவந்தார்.

70 ஓவர்களில் இந்தியா 163 ரன்கள் எட்டியபோது தேநீர் இடைவேளை வந்தது.

ஜடேஜா
ஜடேஜா

அது முடிந்த களமிறங்கிய இந்திய ஜோடி நான்கு ஓவர்கள் தாக்குப்பிடித்து ஆடிக்கொண்டிருந்த நேரத்தில் அடுத்த 75-வது ஓவரை வீச வந்தார் சோயப் பஷீர்.

அந்த ஓவரில் மூன்றாவது பந்தில் ஜடேஜா சிங்கிள் எடுத்து நான் ஸ்ட்ரைக்கர் எண்டுக்கு சென்றார்.

அடுத்த பந்தை நிறுத்திய சிராஜ், அதற்கடுத்த பந்தை கால்களுக்கு அருகிலேயே நிறுத்த பந்து ஸ்டம்பில் பட, 170 ரன்களில் இந்தியா ஆல் அவுட் ஆனது.

181 பந்துகளில் 61 ரன்கள் என கடைசிவரை நின்ற ஜடேஜாவின் ஆட்டமும் வீணானது.

22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று 2 – 1 என தொடரில் முன்னிலை பெற்றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *