
சென்னை: மருத்துவத் துறையில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தேசிய மருத்துவர் தினத்தையொட்டி மருத்துவர் தின விழா- ஆளுநர் ‘எண்ணித் துணிக’ நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மருத்துவ ஆளுமைகளுடன் கலந்துரையாடல் நிகழ்வு ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை வகித்து மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் 50 ஆளுமைகளுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். அப்போது அவர் பேசியதாவது: மருத்துவர்களை ஒவ்வொரு நாளும் போற்றி வாழ்த்த வேண்டும். ஏனென்றால் சமூகத்தில் நிகழும் துயரமான தருணங்களில் நம் நினைவுக்கு முதலில் வருவது மருத்துவர்கள்தான்.