• July 14, 2025
  • NewsEditor
  • 0

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா ஜூலை 13, 1931 அன்று மகாராஜா ஹரி சிங்கின் டோக்ரா படைகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் போராட்டக்காரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஸ்ரீநகரில் உள்ள தியாகிகளின் கல்லறைக்கு செல்லும் போது, காவல்துறையினரால் பலவந்தமாக தடுத்து நிறுத்தப்பட்டார்.

இந்த சம்பவத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கிட்டத்தட்ட காவலர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த முதலமைச்சர் பாஜக ஆட்சியாளர்களை ‘மூடர்கள்’ என்றும் ‘குறுகிய பார்வை கொண்ட முடிவுகளை எடுக்கும், முட்டாள்கள்’ என்றும் திட்டியிருக்கிறார்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்றும் என்.டி.டி.வி தளத்துக்கு அளித்த பேட்டியில் வலியுறுத்தியுள்ளார்.

“பஹல்காம் தாக்குதல், என்னுடைய தோல்வி அல்ல”

பஹல்காம் தாக்குதல் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் நடைமுறையில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்விக்கு, “ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசின் பிரதிநிதியான லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவும் உளவுத்துறையின் தோல்வியுமே பகல்ஹாம் தாக்குதலுக்கு காரணம். இதை கவர்னரே ஒப்புக்கொண்டுள்ளார். என்னுடைய தோல்வி அல்ல. அவரது தோல்வியால் நாங்கள் போரின் விளிம்புவரை செல்லவேண்டியதாயிருந்தது.” எனப் பதிலளித்துள்ளார் ஓமர் அப்துல்லா.

லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா

“காஷ்மீர் மக்கள் ஒரு பொருட்டல்ல என்கிறீர்கள்”

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எதிரான பாஜக அரசின் நடவடிக்கைகளை கடுமையாக சாடிய ஓமர் அப்துல்லா, “இது எனக்கும் என் அமைச்சர்களுக்கும் நடந்ததைப் பற்றியதல்ல… இதன் மூலம் நீங்கள் ஜம்மு காஷ்மீர் மக்களின் குரல்கள் கேட்கப்படாது என்ற செய்தியை மறைமுகமாக சொல்கிறீர்கள். காஷ்மீர் மக்கள் ஒரு பொருட்டல்ல என்கிறீர்கள்.

ஜம்மு காஷ்மீர் மக்கள் ‘அதிகாரமற்றவர்கள்’ என நீங்கள் சொல்ல விரும்புகிறீர்கள். ஆனால் அவர்கள் சக்தியற்றவர்கள் அல்ல. இனி என்ன நடந்ததாலும் எங்களைக் குறை சொல்லாதீர்கள்” என்றார் ஆக்ரோஷமாக.

மேலும் 1931 போராட்டத்தில் இறந்தவர்களைத் தொடர்புபடுத்தும் விதமாக, “நாட்டில் வேறெந்த மக்களை விடவும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கடுமையாக போராடியவர்கள் அவர்கள். ஆனால் நீங்கள் அவர்களை ‘வில்லன்கள்’ போல சித்திரிக்கிறீர்கள். அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் வித்தியாசமாக பார்க்கிறீர்கள்” என மத்திய அரசைக் குற்றம்சாட்டினார் அப்துல்லா.

ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்து!

ஆர்டிகள் 370-ஐ ரத்து செய்து பாஜக அறிவித்தபோது ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உத்தரவிட்டது.

அதன் பிறகு காஷ்மீர் மக்கள் நீண்ட போராட்டங்களின் விளைவாக மோடியும் அமித் ஷாவும் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படுமென உறுதியளித்தனர். கடந்த தேர்தல் பிரசாரத்தில் கூட பிரதமர் அதனை ‘இது மோடியின் வாக்குறுதி’ என வலியுறுத்தினார்.

ஆனால் அந்தற்கான காலக்கெடுவை அறிவிக்கவில்லை. முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓமர் அப்துல்லா, இதற்காக தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார். ஆனாலும் இரண்டு அரசுகளுக்கும் நடுவில் இணக்கம் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்துக்குப் பிறகு , ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தைத் திரும்பப் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என அறிவித்துள்ளார் ஓமர் அப்துல்லா.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *