• July 14, 2025
  • NewsEditor
  • 0

வேலூர் மாவட்டம் ஶ்ரீபுரம் அருகில் அமைந்துள்ள ஊசூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து இருந்த காரணத்தினால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.

உடனடியாக அதே இடத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.16.45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பணிகளும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்நிலையில் இந்த அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. கட்டடம் கட்டும் ஒப்பந்ததாரருக்கு வர வேண்டிய நிதி வராமல் உள்ளதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன என கூறப்படுகிறது.

புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்கும் பணிகள் முடியும் வரை ஊசூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் இருக்கும் பொருட்கள் வைக்கும் சிறிய குடோனில் வைத்து தற்காலிகமாக அங்கன்வாடி மையம் நடத்தப்பட்டு வருகிறது.

போதிய இட வசதி இன்றியும், சரியான காற்றோட்ட வசதியும் இல்லாத நிலையில் சிறிய குடோனில் அங்கன்வாடி மையம் நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து நம்மிடம் பேசிய அங்கன்வாடி மைய குழந்தைகளின் பெற்றோர்கள், “புதிய கட்டடம் கட்டும் வரை இந்த சிறிய குடோன் அங்கன்வாடி மையமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுவாக அங்கன்வாடி மையங்களில் சமையலறை தனியாக இருக்கும். ஆனால் இந்த சிறிய குடோனில் குழந்தைகள் இருக்கும் இடமும், சமையல் செய்யும் இடமும் அருகில் உள்ளது. எனவே குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதியில் நிறுத்தப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் கட்டடம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட வேண்டும். விரைவில் பணிகள் முடித்து குழந்தைகளை புதிய கட்டடத்திற்கு மாற்ற வேண்டும்” என்றனர்.

எப்போது பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெறும் என்று ஊசூர் ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபொழுது, “கட்டடம் கட்டும் ஒப்பந்ததாரருக்கு வரவேண்டிய நிதி வராமல் நிலுவையில் உள்ள காரணத்தினால் தான் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசின் MGNREGS திட்ட நிதி வந்த உடன் பணிகள் தொடங்கப்படும்.

அதற்காக வட்டார வளர்ச்சி அலுவகத்தில் இது குறித்து விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளது. ஒரு சில வாரத்தில் பணிகள் தொடங்கி நடைபெறும்” என்று கூறினார். சமையல் செய்யும் இடத்திற்கு அருகிலும் சரியான காற்றோட்ட வசதி இல்லாமலும் சிறிய குடோனில் அங்கன்வாடி மையம் நடத்தப்படுவதினாலும் சிறு குழந்தைகளை ஒரு வித அச்சத்துடனே பெற்றோர்கள் விட்டு செல்வதை பார்க்க முடிகிறது.

இதனை கருத்தில் கொண்டு விரைந்து கட்டட பணிகள் எல்லாம் முடித்து, குழந்தைகளை புதிய கட்டடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *