
6 நாட்களுக்கு முன் காணாமல் போன டெல்லி பல்கலைக்கழக மாணவி சினேகா டெப்நாத் (Sneha Debnath), சடலமாக யமுனை ஆற்றிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறார்.
மாணவி சினேகா திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆத்ம ராம் சனாதான தர்ம கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலைப் பட்டம் படித்து வந்திருக்கிறார்.
கடந்த ஜூன் 7-ம் தேதி தனது தோழியை டெல்லியிலுள்ள சராய் ரோஹிலா ரயில் நிலையத்திலிருந்து ஊருக்கு அனுப்பி வைக்கச் செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார் சினேகா.
காலை 5.15 மணிக்கு கேப் பிடித்து வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார். பிறகு, காலை 8.45 மணிக்கு சினேகாவின் தொலைபேசி ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது.
அதன் பிறகு, சினேகாவை அழைத்துச் சென்ற கேப் டிரைவரை அவரது குடும்பத்தினர் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். அவர் சினேகாவை வசிராபாதிலுள்ள சிக்னேச்சர் பாலத்தில் இறக்கிவிட்டதாகக் கூறியிருக்கிறார்.
அந்தப் பகுதியில், சி.சி.டி.வி கேமராக்களும் பழுதான நிலையில் இருந்ததால் சினேகா எங்கு சென்றார் எனக் காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பிறகு, அப்பகுதியில் அருகிலிருந்தவர்கள் கடைசியாக அவரை சிக்னேச்சர் பாலத்தில் பார்த்ததாகக் கூறியிருக்கிறார்கள். தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் காவல்துறைப் பிரிவுகளின் உதவியுடன் அப்பகுதியில் தேடுதல் பணியைத் தொடங்கியது. 6 நாள்களுக்குப் பிறகு அவரின் சடலத்தை மீட்டிருக்கிறார்கள்.

சினேகா கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்ததாக அவரது நண்பர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
சினேகாவின் குடும்பத்தினரும் சில நண்பர்களும் சிக்னேச்சர் பாலப் பகுதியில் உள்ள கண்காணிப்பு குறித்து கவலை தெரிவித்திருக்கிறார்கள்.
சினேகா காணாமல் போன நேரத்தில் சிக்னேச்சர் பாலத்திலோ அல்லது அதன் அருகிலோ உள்ள எந்தவொரு சிசிடிவி கேமராக்களும் செயல்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.