• July 14, 2025
  • NewsEditor
  • 0

இங்கிலாந்து, இந்தியா இடையே லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10 முதல் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளின் வீரர்களும் இந்தத் தொடரின் முதல் இரு போட்டிகளை விடவும் ஆக்ரோஷமாக ஆடி வருகின்றனர்.

முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் 387 ரன்களில் ஆல் அவுட் ஆனது. மூன்றாம் நாளின் இறுதியில் இங்கிலாந்து ஒப்பனர்கள் ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினர்.

நாளின் கடைசி ஓவரை பும்ரா பந்துவீசிக்கொண்டிருந்தபோது ஜாக் க்ராவ்லி வேண்டுமென்றே நேரத்தைக் கடத்தும் செயலில் ஈடுபட்டார்.

சுப்மன் கில்

அப்போது இந்திய கேப்டன் சுப்மன் கில் ஜாக் க்ராவ்லியிடம் தகாத வார்த்தையில் பேசினார்.

கில் அவ்வாறு பேசியது ஸ்டம்ப் மைக்கிலும் பதிவானது. கில்லின் இத்தகைய செயலை பலரும் விமர்சித்தனர்.

அதையடுத்து, நேற்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சில ஓவர்களிலேயே பென் டக்கெட்டை வீழ்த்தினார் சிராஜ்.

அந்த விக்கெட்டை கடும் ஆக்ரோஷமாகக் கொண்டாடிய சிராஜ், பென் டக்கெட்டின் அருகில் சென்று முறைத்தார்.

அதன்பின்னர் 192 ரன்களில் இங்கிலாந்து ஆல் அவுட் ஆக, அடுத்து களமிறங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.

சிராஜ் - பென் டக்கெட்
சிராஜ் – பென் டக்கெட்

இவ்வாறிருக்க, நான்காம் ஆட்டத்தில் பென் டக்கெட்டின் விக்கெட்டை எடுத்த பிறகு அவரிடம் கடும் ஆக்ரோஷமாக செயல்பட்டதற்காக சிராஜுக்கு ஐ.சி.சி அபராதம் விதித்திருக்கிறது.

இது குறித்த அறிக்கையில் ஐ.சி.சி, “லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஐ.சி.சி நடத்தை விதிகளை மீறியதற்காக சிராஜுக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்துடன், சிராஜுக்கு ஒரு டிமெரிட் புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் அவரின் இரண்டாவது டிமெரிட் புள்ளியாக உயர்ந்துள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட், சிராஜ் மீதான ஐ.சி.சியின் இத்தகைய நடவடிக்கையை விமர்சித்திருக்கிறார்.

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஸ்டுவர்ட் பிராட், “இது அபத்தமானது. சிராஜ் ஆக்ரோஷமாகக் கொண்டாடியதற்காக 15 சதவிகிதம் அபராதம் விதித்திருக்கிறார்கள்.

ஆனால், போட்டியில் live-ல் தகாத வார்த்தை பேசிய கில்லுக்கு எதுவும் இல்லை.

ஒன்று இருவருக்குமே அபராதம் விதித்திருக்க வேண்டும். இல்லை, இருவருக்குமே அபராதம் விதித்திருக்கக்கூடாது.

வீரர்கள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல. ஆனால் ஒருநிலைத்தன்மையுடன் இருப்பது முக்கியம்” என்று பதிவிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *