
மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரிஜேஷ் சோனி (33), ஆந்திராவைச் சேர்ந்த நஜீப் (42) ஆகியோர் மும்பையை சுற்றிப்பார்க்க வந்தனர். அவர்கள் மும்பையில் உள்ள தங்களது நண்பர் யாதவ் என்பவருடன் சேர்ந்து மும்பை முழுக்க காரில் சுற்றிப்பார்த்தனர். மாலை நேரத்தில் அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து பீர்பாரில் மது அருந்தினர்.
அவர்கள் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, காரை நேராக ஜுகு கடற்கரைக்கு கொண்டு சென்றனர்.
கார் கடல் அருகில் சென்றபோது அங்கு கிடந்த மணலில் சிக்கிக்கொண்டது. அவர்களால் காரை மேற்கொண்டு நகர்த்த முடியவில்லை. இரவு நேரமாகிவிட்டதால் அவர்களது உதவிக்கு யாரும் வரவில்லை. அந்த வழியாக ரோந்துப்பணிக்கு வந்த போலீஸார் கார் கடல் மணலில் சிக்கி இருப்பதை பார்த்து உடனே அதனை மீட்க உதவி செய்தனர்.
டிராக்டர் ஒன்று வரவழைக்கப்பட்டு கார் மணலில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டது. அதுவும் இரண்டு மணி நேரம் போராடி கார் வெளியில் கொண்டு வரப்பட்டது.
காருடன் அவர்கள் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மூன்று பேரும் மது அருந்தி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மது அருந்திவிட்டு கார் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மூவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களது காரை போலீஸார் விடுவிக்கவில்லை.
குடிபோதையில் அவர்கள் ஓட்டிய கார் மணலில் சிக்காமல் இருந்திருந்தால் கடலுக்குள் சென்று இருக்கும். அதிர்ஷ்டவசமாக மணலில் கார் சிக்கியதால் மூவரும் உயிர் தப்பினர்.