
அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தார்.
அதில் பேசிய ஓ.பி.எஸ், “அரசியல்ரீதியான கட்சிகளுக்கு அந்தக் கட்சி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், பொதுமக்களுக்கு எந்த தலைவர் நன்மை செய்கிறாரோ அவர்தான் ஆளும் இடத்துக்கு வருவார். எம்.ஜீ.ஆரும் ஜெயலலிதாவும் அதைத்தான் செய்தார்கள்.
இன்று நாம் ஆலோசித்ததிலிருந்து முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறோம். சில முடிவுகளை என்னால் வெளியில் சொல்ல முடியாது. அது என்ன முடிவுகளென்று உங்களுக்கே தெரியும். மதுரை நமக்கு எப்போதுமே ராசியான இடம். 2011 இல் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கையில், கோயம்புத்தூர், திருச்சி, மதுரையில் மண்டல மாநாடுகளை நடத்தலாம் என அம்மாவிடம் சொன்னோம். மதுரையில் நடந்த மாநாடுதான் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்கக் காரணமாக இருந்தது.

மாநாட்டுக்கு முன்பாக காஞ்சிபுரத்தில் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். காஞ்சிபுரமும் அண்ணா பிறந்த ராசியான இடம். 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக முதல் பொதுக்கூட்டத்தை அங்கேதான் நடத்தி வென்றோம். அதை முடித்துவிட்டு மதுரையில் மாநாடு. அங்கே நீங்கள் எதிர்பார்க்கும் முடிவை அறிவிப்போம். நாடாளுமன்றத்தில் இராமநாதபுரத்துக்கு நிராயுதபாணியாக சென்றோம். இந்தியாவிலேயே ஒரு சுயேட்சை வேட்பாளர் 33% எடுத்ததே இல்லை. மக்கள் சக்தி நம்முடன் தான் இருக்கிறது என்பது அதன் மூலம் நிரூபணமானது.” என்றார்.