
அபுதாபி: போயிங் 787 விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை இயக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு தனது விமானிகளை எடிஹாட் விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் விபத்துக்குள்ளானது குறித்த முதற்கட்ட அறிக்கை வெளியானதை அடுத்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எடிஹாட் விமான நிறுவனம் தனது விமானிகளுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தலில், "போயிங் 787 விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை இயக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், அந்த சுவிட்சுகளின் செயல்முறையை ஆய்வு செய்ய வேண்டும். எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்டுகள் அருகில் உள்ள வேறு ஏதேனும் சுவிட்சுகளை இயக்கும்போது எச்சரிக்கையுடன் இயக்க வேண்டும். கவனக்குறைவாக இயக்கப்படுவதற்கு வழிவகுக்கும் எந்தவொரு பொருளும் அருகில் இருப்பதை தவிர்க்க வேண்டும். முரண்பாடுகள் ஏதும் இருப்பது கவனிக்கப்பட்டால் அது குறித்து உடனடியாக புகாரளிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.