
வைகோவின் மதிமுகவில் உட்கட்சிப் பிரச்னைகள் பேசுபொருளாகியிருக்கும் சூழலில், வைகோ தன்னை துரோகி எனக் கூறியதற்கு மல்லை சத்யா மனம் வெதும்பி ஒரு பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார்.
நான் காரணமில்லை
மல்லை சத்யா எழுதியிருப்பதின் முக்கிய அம்சங்கள், ‘கழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு நான் காரணமில்லை. வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு துரோகம் இழைத்த மாத்தையாவுடன் என்னை ஒப்பிட்டு வைகோ பேசியிருக்கிறார்.
சான்றோர் பெருமக்களே நான் மாத்தையா போன்ற துரோகியா? நீதி சொல்லுங்கள். என் அரசியல் வாழ்வில் வைகோவுக்கு எதிராக நான் பேசியிருந்தேன், செயல்பட்டிருந்தேன் என்றால் இளங்கோ அடிகளாரின் ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்ற நீதி நின்று என்னை சுட்டெரிக்கட்டும்.
துரை வைகோவின் அரசியலுக்காக…
தனது மகன் துரை வைகோவின் அரசியலுக்காக 32 ஆண்டுகளாக வெளிப்படைத்தன்மையோடு உண்மையாக இரவு பகல் பாராமல் பணியாற்றி வந்த என் மீது அபாண்டமாக துரோகி என்கிற பழியை சுமத்துகிறார்.

அன்றிலிருந்து இன்று வரை என்னால் தூங்க முடியவில்லை. என் அரசியல் பொது வாழ்க்கையை வீழ்த்துவதற்கு அவர் வேறு ஏதாவது குற்றச்சாட்டுகளை சொல்லியிருக்கலாமே அல்லது ஒரு பாட்டில் விஷம் வாங்கிக் குடிக்க சொல்லியிருந்தால் செத்துப் போயிருப்பேனே. கடந்த மூன்று ஆண்டுகளாக சுயமரியாதையை இழந்து ஒரு சிலரால் கடும் நிந்தனைக்கும் அவதூறுக்கும் ஆளாகி வந்திருக்கிறேன்.’ எனக் கூறியிருக்கிறார்.